கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டார். ஆனால், இதனை அதிமுகவின் கூட்டணி கட்சிகள் எதுவும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரே தவிர கூட்டணியின் வேட்பாளர் அல்ல என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.
அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோமென பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜனவரியில்தான் முடிவு செய்வோம் என தேமுதிக அறிவித்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால், அதனை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. முதல்வர்தான் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்ததாக தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
read more: தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர்: பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி திட்டவட்டம்!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணியிடம் முதல்வர் வேட்பாளர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “ எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல. தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்” என்ற தகவலை தெரிவித்துள்ளார்.