தமிழகத்தின் பணிக்கு மும்பையில் தேர்வு மையம் அமைத்துள்ள மத்திய அரசுக்கு மதுரை எம்.பி வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழக பணிகளுக்கான அறிவிக்கையை வெளியிட்டது. கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறும் என்று குறிப்பிட்டது.
இதனை எதிர்த்து பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங்கிற்கும் மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார். இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டிய வெங்கடேசன்,
எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும். எனது நியாயமான கவலைகளை ஏற்று உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “ஏற்கனவே சி.ஆர்.பி.எப் நடத்துகிற துணை மருத்துவப் பதவிகளுக்கான தேர்வு மையங்கள் 9 ல் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை என்று அரசுக்கு கடிதம் எழுதினேன். விண்ணப்பங்களைப் பொருத்து பரிசீலிப்பதாகப் பதில் சொன்ன அரசாங்கம் இப்போது தமிழகத்தில் மையம் அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
read more: திமுக ஆட்சியில் கல்விக் கடன் ரத்து: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
மேலும், மையங்களை அறிவிக்கும் போதே கவனம் எடுக்காவிட்டால் எப்படி விண்ணப்பங்கள் உரிய எண்ணிக்கையில் வரும்? இப்படி தமிழகத்திற்கு தொடர்கிற பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.