முதல்வர் மற்றும் வேலுமணி ஆகியோரை மிரட்டியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அதிமுக புகாரளித்துள்ளது.
தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி நடந்த மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பூங்கொடி என்ற அதிமுக பிரமுகர், ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்ப, அவர் வேலுமணி அனுப்பி வந்த ஆள் என குற்றம்சாட்டினார் ஸ்டாலின்.
அதன்பிறகு வேலுமணி இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இல்லையெனில் வேலுமணி இல்லை, முதல்வரே எங்கும் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகாரளித்தார்.
பின்னர் பேட்டியளித்த பாபு முருகவேல், “மக்கள் கிராம சபை என்ற பெயரில் சட்ட விரோதமாகப் பொதுக்கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் முதல்வர், அமைச்சர் வேலுமணி ஆகியோரை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொண்டாமுத்தூரில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், திமுகவினரைத் தூண்டிவிடும் வகையில் அவர் பேசியுள்ளார்” என்றார்.
read more: பொங்கல் பரிசில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள் தான் இவர் என்று ஸ்டாலின் கற்பனையாக சித்திரித்தார். இதனால் திமுகவினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தினர். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.