கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். அதன்பிறகு அவருக்கு வழக்கமாக நடைபெறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் காமராஜ். விரைவில் அமைச்சர் நலம்பெற வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சரின் உடல்நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஜனவரி 5ஆம் தேதியன்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சிடி ஸ்கேன் இயல்பாக இருக்கிறது. அமைச்சருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தது.
read more: ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: சவால் விடுக்கும் எடப்பாடி பழனிசாமி
சாதாரண ஒரு அறைக்காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.