20 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இடஒதுக்கீட்டுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையம் அமைத்த போதிலும் அதனை காலம்தாழ்த்தும் உத்தி என விமர்சனம் செய்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இந்த நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் சில கருத்துக்களை ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறையால் சில குறிப்பிட்ட சமுதாயங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றன. இந்த சமூக அநீதி களையப்பட வேண்டும். சமூகநீதி தழைக்க வேண்டும் என்ற அவர்,
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 தொகுப்புகளாக, ஆந்திரத்தில் 6 தொகுப்புகளாக, கர்நாடகத்தில் 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 39 ஆண்டுகள் ஒரே தொகுப்பாகவும், வன்னியர்கள் போராட்டத்திற்குப் பிறகு 1989 முதல் 32 ஆண்டுகளாக இரண்டே தொகுப்பாகவும் பிரித்து சமூக அநீதி இழைக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சொத்தை மீட்பதற்காகவே அறவழி தொடர் போராட்டங்களை நடத்துகிறோம். இனியும் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. 20% இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம் என்ற சூளுரைத்த ராமதாஸ், 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார் என்றும் விமர்சித்தார்.
read more: மன்னிப்பு கேட்க வேண்டும்: உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய சசிகலா தரப்பு!
20% இட ஒதுக்கீட்டுக்காக அதை அனுபவிக்கும் எந்த சாதியும் போராடவில்லை; ஆதரவுக் குரல் கூட கொடுக்கவில்லை. அது முழுக்க, முழுக்க வன்னியர்களின் சொத்து. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.