கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (10.1.2021) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என 2ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏழுகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்குப் பிறகும் மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இல்லை என்றதோடு,
திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகிறவரை விவசாயிகளின் போராட்டம் ஓயாது.விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிரமான பிரச்சாரங்களைக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கட்டுப்பாடுகளை மீறுகிற வகையில் ஊடகத்தின் மூலமாக காங்கிரஸின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்கிற போக்கு பரவலாக வளர்ந்து வருகிறது. உடனடியாக இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்., காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் 100 பேருக்கு மேல் நியமிக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் மற்றும் ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது காங்கிரஸ்.




