பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவரை 2 நாள் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.
இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் மிரட்டி பணம் பறித்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சரணடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரிலேயே 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்டையில் அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு உள்ளிட்ட 3 பேரை கடந்த 5-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்று கருதிய சிபிஐ அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன்படி ஹெரன்பால் என்பவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. 5 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் அருளானந்தம், பாபு ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைத்த நிலையில் ஹெரன்பாலை மட்டும் கூடுதலாக விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று கூறி சிபிஐ அதிகாரிகள் அனுமதி வாங்கி இருக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு 5 பேர் சிக்கிய நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
அதன்பிறகு தற்போது 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர். அதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இதில் பல அரசியல் முக்கிய புள்ளிகள் சிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.