விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே மத்திய அரசுடன் 10 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நேற்று நடைபெற்ற 11 ம் சுற்று பேச்சுவார்தையில் மத்திய அரசு சார்பில் அறிவித்திருந்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் என்ற திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தபோதிலும்,விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும்வரை இந்த போராட்டம் தொடரும் எனவும், குடியரசு தினவிழாவில் டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வீடியோ வெளியிட்டு கூறியதாவது: கனத்த இயத்தோடு நான் சொல்வது என்னவென்றால், இந்த பேச்சுவார்த்தை எந்த ஒரு மையப்புள்ளியையும் கருத்தில் கொள்ளாமல் 20 நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது. சரியான தீர்வும் எட்டப்படவில்லை.
Read more – 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் எப்போது ? தேர்வுக்கான பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி
விவசாயிகள் கையில்தான் இனி அனைத்தும் இருக்கிறது. இந்த விவகாரத்தின் தன்மை புரிந்து தான், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த சட்டங்களை நாங்கள் நிறுத்திவைக்கிறோம் என்பதால், இந்த சட்டங்கள் குறையுள்ளது எனத் தவறாகக் கருதக்கூடாது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய போராட்டத்தினை அறிவித்து விவசாயிகள் அதில் வெற்றியும் காண்கிறார்கள். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏதேனும் முடிவெடுத்தால், அல்லது முடிவுக்கு வந்தால், நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.




