மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மதுரையில் கோயில் திறக்கப்பட்டுள்ளது. ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கூட்டாக திறந்து வைத்தனர்.
மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் 12 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு 7 அடி உயரத்தில் 400 கிலோ எடை கொண்ட வெங்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோ பூஜை, யாக சாலை பூஜை நடத்தப்பட்டு இந்த கோவிலை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் நலிவுற்ற அதிமுக தொண்டர்கள் 234 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு பொற்கிழி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வரும், துணை முதல்வரும் பேசும்போது சத்துணவு திட்டத்தை தந்தவர் எம்.ஜி.ஆர், மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பு செய்தவர் ஜெயலலிதா என்று கூறினர். அதிமுகவினர் ஒருமித்த கருத்தோடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள், 2021 ல் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம் என்றனர்.