ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ள மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, ராணுவம் தேர்தல் முடிவுகளை ஏற்கவ மறுத்தது. பின்னர் அரசை புறந்தள்ளி ராணுவம் ஆட்சியையும் கைப்பற்றிவிட்டதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை கைது செய்து சிறை வைத்துள்ளது.
இதனால் மியான்மரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் இணையதள சேவைகளுக்கும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.