முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலா ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா 8ம் தேதி சென்னை திரும்ப உள்ளார். சசிகலாவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் அதிமுகவினரே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி வீட்டருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.