சோமாலியாவில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள், இம்மாத இறுதியில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
குஜராத் கட்ச் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், 36 இடங்களிலும் வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் மூலம், வெட்டுக்கிளி கூட்டத்திற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில், இப்பகுதிகளில் முழுமையாக வளர்ச்சி பெறாத இளஞ்சிவப்பு வண்ண வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள், முழுமையாக வளர்ச்சி பெற்ற மஞ்சள்நிற வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின், உணவு வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளிகள் நிலவர அறிக்கையில், ‘ஹார்ன் ஆப் ஆப்பிரிக்கா என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டங்கூட்டமாக படையெடுப்பது, வரவிருக்கும் வாரங்களிலும் நீடிக்கும்.
சோமாலியாவில் இருந்து இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள், கிழக்கு முகமாக வடக்கு நோக்கிப் பயணிக்கின்றன. இதிலிருந்து சில பகுதி கூட்டங்கள் இந்துமாக்கடல் வழியாக இந்த மாத இறுதிக்காலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழையலாம்’ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.