மூதாட்டிகளுக்கு இலவசமாக நகை தருவதாகக் கூறி 15 பேரை ஏமாற்றிய நபரை போலீஸ் பிடித்து இருக்கிறது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த நபர் ஒருவர் குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்தால் நகை இலவசம் என்று கூறியிருக்கிறார். இதை நம்பிச் சென்ற அந்த மூதாட்டி அணிந்திருந்த மோதிரம், செயின் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பியிருக்கிறார். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் திருமலை என்பவன் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
கீழ்ப்பாக்கத்தில் பதுங்கி இருந்த திருமலையை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே திருமலை 27 நாட்களில் சுமார் 15 மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் செய்தால் நகை இலவசம் என ஒவ்வொருவரிடமும் ஒரு ஒரு மாதிரி கூறி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 2019-ல் நடந்த நகை திருட்டில் சிறை சென்று ஜனவரி மாதம் வெளியே வந்த திருமலை மீண்டும் திருடியபோது போலீசில் வசமாக சிக்கிக்கொண்டான்.