இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா, இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது, இது தொடர்பாக நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், புதிதாக 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோக இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா 708 பேரின் உயிரையும் காவு வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. அங்கு மட்டும் 3லட்சத்தி 75ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் அங்கு புதிதாக உயிரிழந்த 267 பேருடன் சேர்த்து, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு பாதிப்பு 2லட்சத்து 25 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், கொரோனா பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள தேசிய தலைநகர் டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்து 606 ஆகவும், உயிரிழப்பு 3,827 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவிலும், 5-வது இடத்தில் உள்ள ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியை பொறுத்தவரையில் கர்நாடகாவில் 1,878 பேரும், ஆந்திராவில் 1,041 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.




