தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 154 முதல் 162 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி தேர்தலில் 41.4% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்போதைய கருத்துக்கணிப்பின் படி 2016 தேர்தலை விட 2% கூடுதல் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 28.6% வாக்குகளை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. சீட் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணி 58 முதல் 66 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்துக்கு 2 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 6.9% வாக்குகளையும், இதர கட்சிகள் 14.8% வாக்குகளையும் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 1 முதல் 5 தொகுதிகளையும், இதர கட்சிகள் 5 முதல் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.