மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் ஷானி சிங்னாபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வீடுகளில் கதவு, பூட்டு போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. வீடுகளில் மட்டுமின்றி கடைகள், அஞ்சல் அலுவலகம்… ஏன், வங்கியில் கூட கதவுகள் கிடையாது.
இந்த கிராம மக்கள் கதவுகளை பயன்படுத்தாமல் இருப்பதற்குப் பின்னால் ஆன்மீகம் கலந்த சுவாரஸ்ய வரலாறு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனஸ்னாலா நதிக்கரையோரம் ஒருவர் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு ஒரு கரும்பாறை இருந்திருக்கிறது. இதைக் கூர்மையான தடியால் ஆடு மேய்த்த நபர் அடித்துள்ளார். அப்போது அதிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும்,
அவரின் கனவில் சனி பகவான் தோன்றி ‘நீ தாக்கியது சிலை உருவில் இருக்கும் என்னை…’ என்றும், தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னதாகவும் கிராமத்தினர் நம்புகின்றனர்.
இப்படி கனவின் காரணமாக அமைக்கப்பட்ட கோயிலை அவர்கள் இன்றைக்கும் வழிபட்டு வருகின்றனர்.
பிரபலமான இடமாக மாறிய இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோயில் அமைக்கப்பட்டதால் தங்களை ஆபத்து மற்றும் இக்கட்டான சூழல்களிலிருந்து சனி பகவான் பாதுகாப்பார் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை. இதனால் அவர்கள் வீடுகளில் கதவுகள் வைப்பதே இல்லை.
திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு மனநோய், கண் பார்வையை இழப்பது, நோய்வாய்ப்படுவது போன்று தண்டனை கிடைக்கும் என்று கிராமத்தினர் நம்புகின்றனர்.
இதை நம்பாமல் தனது வீட்டுக்கு கதவை அமைத்த ஒருவர் அடுத்த நாளே விபத்தில் உயிரிழந்தாராம்.இதனால் எவரும் புதிதாக வீட்டில் கதவு, பூட்டு போன்றவைகளை பயன்படுத்துவது கிடையாது.