இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தீவிர ரசிகராக மாறிவிட்டதாக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் இந்தாண்டு துவக்கத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். பின் இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட்டின் தீவிர ரசிகராக மாறி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கங்குலி கூறுகையில், “நான் தற்போது மீண்டும் முழுமையாக குணமடைந்து விட்டதாக உணர்கிறேன். எனது பணிகளை துவங்கியுள்ளேன். இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் தற்போது உள்ள அனைத்து வீரர்களும் சிறந்த வீரர்கள் தான். பிசிசிஐயின் தலைவராக பார்க்கும் பொழுது ஒரே ஒரு வீரரை மட்டும் சிறந்த வீரர் என்று என்னால் கைகாட்டி குறிப்பிட்டு சொல்லமுடியாது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பேட்டிங்கை நான் அதிகம் விரும்புகிறேன்.
ரிஷப் பண்ட்டின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். இதேபோல ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரின் பந்துவீச்சை அதிகம் நேசிக்கிறேன். சார்துல் தாகூரின பந்துவீச்சும் எனக்கு அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் அவரிடம் துணிச்சல் உள்ளது” என்றார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் தனது வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த சவுரவ் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் கங்குலி. அதன்பிறகு அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக ஸ்டண்ட் பொருத்தப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டது. பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கங்குலிக்கு சிகிச்சை செய்த இடத்தில் வலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜனவரி 27ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார் கங்குலி. பிசிசிஐ தலைவராக உள்ள தற்போது பணிகளை மீண்டும் துவங்கியுள்ளார்.