பல்லடம் அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த நாய் மூன்றாண்டுகளுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் பகுதியில் சுமார் 60 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணறு உள்ளது. அதே பகுதியில் கட்டிடத்தொழிலாளி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
ஒரு நாள் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய் தவறி கிணற்றில் விழுந்தது. நாயை மீட்க அப்பகுதியில் உள்ளவர்கள் முயற்சித்தும் முடியாமல் போனது. இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் கைவிட்டனர்,
நாயை வளர்த்தவரும் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அப்பகுதி மக்கள் கிணற்றில் உணவுப் பொருட்களை வீசி வந்தனர். ஆனால் நாயை மீட்க முயற்சி எடுக்கவில்லை.
இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர், விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து பல்லடம் தீயணைப்புதுறையினர் உதவியுடன்,விலங்குகள் நல அமைப்பினர் நாயை மீட்க போராடினர்.
இதையடுத்து பத்திரமாக கயிறு கட்டி நாய் மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட நாயை பொதுமக்கள் தழுவி கொஞ்சினர். மேலும் தீயணைப்புதுறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். 3 ஆண்டுகளாக கிணற்றில் வீசப்பட்ட உணவுப் பொருட்களை வைத்து நாய் உயிர்வாழ்ந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நபராவது தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்திருந்தால், நாயை முன்கூட்டியே காப்பாற்றியிருக்கலாம் என்றும், செல்லிப்பிராணிகளை ஒரு போதும் கைவிடக்கூடாது என விலங்குகள் நல அமைப்பினர் வலியுறுத்தினர்.