மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் சட்டம் சிலருக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாய சங்க அமைப்புகள் குற்றட்சாட்டி வருகின்றனர். ஆனால் இது விவசாயிகளுக்கு நலன் தரும் சட்டம் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உ பி.,யில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ்கட்சி, பஞ்சாபில் சில கட்சியினர், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லி, பஞ்சாப், அரியானாவில் ஒரளவுக்கு ஆதரவு உள்ளது. டில்லியில் கூடுதல் பாதுகாப்பு போலீசார் ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி தவிர எந்த கட்சியினரும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இடதுசாரி தரப்பில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைகள் எதுவும் தமிழகத்தில் அடைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




