தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தல அஜித் குமாரின் வலிமை திரைப்படம். இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் போனி கபூர் தயாரிப்பில், டைரக்டர் ஹெச்.வினோத்துடன் இணைந்து அஜித் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தல 61 படத்திற்கான திரைக்கதை தயாராகி விட்டதாம். இந்த படத்தின் கதை அஜித்திற்கு பிடித்து விட, உடனே ஓகே சொல்லி விட்டார் என்றெல்லாம் வலிமை படப்பிடிப்பின் போதே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் மீது இவ்வளவு நம்பிக்கை ஏன் என்ற கேள்விக்கு அவர் பேசாவிட்டாலும் அவரது வேலை பேசும் என்பதில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் தனது கருத்துகளை தனது திரைப்படங்கள் வாயிலாக பிரதிபலிக்கிறார். நடிகர் அஜித்குமார் என்னை சந்திக்க இயக்குனர் வினோத்தை சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய மும்பை இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது, எனது மனைவி மறைந்த நடிகை ஸ்ரீதேவி இயக்குனர் வினோத் உடன் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் தனது கதையினை ஸ்ரீதேவியுடன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதில் ஸ்ரீதேவி மிகவும் ஈர்க்கப்பட்டார். வினோத்தின் பார்வை, பாதை அனைத்தும் தெளிவாகவே இருக்கிறது. என்னுடைய அடுத்த திரைப்படமும் அஜித்குமார் மற்றும் வினோத் ஆகியோரின் கூட்டணியுடன் அமையப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இது தல அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.