கடந்த சனிக்கிழமையன்று தூத்துக்குடியில் இருந்து ‘அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வென்னிலா’ என்ற படகில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒன்பது மீனவர்கள் மாலத்தீவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்படகில் இருந்த அவசரநிலை (இதுபோன்ற ஆபத்துக்காலங்களில் உபயோகிக்கக் கூடிய) தொலைத்தொடர்பு சாதனம் மூலம் நேற்றிரவு ‘சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு’ தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அந்தப் படகின் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அதில் பயணித்த ஒன்பது மீனவர்கள் குடும்பத்தினர் தரப்பில் இருந்து திமுக எம்.பி கனிமொழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது டெல்லியில் இருந்த அவர் உடனடியாக மத்திய அமைச்சகத்தை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக மீனவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மாலத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று தூத்துக்குடி மீனவர்கள் சென்ற படகிற்கு சற்று தூரத்தில் இருப்பதைக் கண்டறிந்து அக்கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அந்த ஒன்பது மீனவர்களும் காப்பாற்றப்பட்டு மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்பது தூத்துக்குடி மீனவர்களை காப்பாற்ற முயற்சியெடுத்த கனிமொழி கருணாநிதி எம்பிக்கு அவர்கள் குடும்பத்தினர் சார்பில் விசைப்படகு சங்கத் தலைவர் வெலிங்டன் நன்றி தெரிவித்துள்ளார்.




