முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா என உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை சுட்டிக்காட்டி அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் வாதங்களை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து இந்திய நிபுணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீங்கள் சொல்லக்கூடிய சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் நிபுணத்துவம் கொண்டவர்கள்தான்! மேலும், நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களை எல்லாம் ஒரே நாளில் செய்து முடிக்கக் கூடிய காரியமல்ல என கூறினர்.
இதனை அடுத்து முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை கண்காணிப்புக்க வரும் 21ம்தேதிக்குள் தாக்கல் செய்ய அணை கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவத்தனர்.




