நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மற்றும் தமிழக முதலமைச்சரின் கடிதத்தை ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்-யிடம் வழங்கினார் திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா.
“தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2022” என்ற புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. அதன் நகலை இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் நீட் அறிமுகம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களின் சேர்க்கை உரிமைகளை பறிப்பதன்மூலம், அரசியலைப்பு அதிகார சமநிலை சேதப்படுகிறது. நீட் தேர்வால், மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க, மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதன் நகலை திமுக மூத்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து வழங்கி வருகின்றனர்.
அண்மையில் கேரள மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் பஹெல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து முதலமைச்சரின் கடிதம் மற்றும் தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டது. அதே போல இன்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா சந்தித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்கண்ட் மாநில முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் மற்றும் தீர்மானத்தின் நகலை வழங்கினார்.