உடல் நலக்குறைவால் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான ராஜ பாபு திடீரென மரணமடைந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ராஜபாபு. இவர் ’ஊரிக்கு மோனகாடு’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
வெங்கடேஷ், மகேஷ்பாபு நடித்த ‘சீதம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு’, மகேஷ்பாபுவின் பிரம்மோத்சவம், வெங்கடேஷ், த்ரிஷா நடித்த ஆடவரி மாட்லாக்கு அர்த்தலே வேருலே, சமுத்திரம், மல்லி ராவா, ஸ்ரீகாரம் உட்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டி.வி.சீரியல்களில் நடித்து வந்தார். சிறந்த நடிப்புக்காக ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட சில விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக, உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருடைய மறைவை அடுத்து நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.