கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். பள்ளி தேர்வுகளில் எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுபவர். இருப்பினும் மாணவர் கீர்த்திவாசன் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் 2021 ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் தேர்வினையும் எழுதி இருந்த அவர், ரிசல்ட்டுக்காக காத்திருந்தார்.
தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனவருத்ததில் இருந்த மாணவன் கீர்த்திவாசன், நேற்று திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில் இரண்டாவது ரேங்க் வாங்கும் அளவிற்கு அதிக மதிப்பெண்களை பெறுவார் எனவும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்று இருந்த நிலையில் மத்திய அரசு தேர்வை அறிவிப்பை வெளியிட்டதால் சரியாக தயாராகாமல் இருந்த நிலையில் தேர்வு வைக்கப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
3 ஆண்டுகளாக வேறு படிப்புகள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செல்லாமல் மருத்துவம் படிக்க வேண்டும் என முயன்று நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நீட்தேர்வு ரிசல்ட் அச்சம் காரணமாக மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




