சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 வயது சிறுமியான தன்ஹி மல்ஹார் பீரியாடிக் அட்டவணையில் உள்ள அனைத்து தனிமங்களின் பெயர்களை மனப்பாடம் செய்வதில் உலக சாதனை புரிந்துள்ளார்.

கேரளாவின் தளச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஜெம் கிட் இன்டர்நேஷனல் ப்ரீ ஸ்கூலில் நர்சரி வகுப்பு படித்து வருகிறார் 3 வயது சிறுமியான தன்ஹி. இவரது பெற்றோர் சுகில் மற்றும் ஜிசா இருவரும் கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

கொரோனா பெரும் தொற்று காரணமாக விடப்பட்ட விடுமுறை நாட்களை சிறப்பாக பயன்படுத்திய இந்த குழந்தை மிக இளவயதில் மிகவும் வேகமாக தனிம அட்டவணையில் உள்ள அனைத்து தனிமங்களின் பெயர்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தது என்பது சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெம் கிட் இன்டர்நேஷனல் ப்ரீ ஸ்கூலில் படிக்கும் இந்த சிறுமியின் சாதனையை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன.
தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களையும் ஒரு நிமிடம் ஒரு வினாடிக்குள் மனனமாக சொல்லி அசத்தியுள்ளார் சுட்டிக் குழந்தை தன்ஹி.
தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களின் பெயர்கள் பொதுவாக ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளை கொண்டிருக்கும். நிறைய பெயர்கள் பெரியவர்களின் நாக்கினை குழற செய்யும் அளவிற்கு இருக்கும்.
சாதனை குறித்து சிறுமி தெரிவிக்கையில், நான் அட்டவணையில் இருக்கும் அனைத்து தனிமங்களின் பெயர்களையும் மனனம் செய்து அதை ஒரே நாளில் திரும்ப திரும்ப எனக்குள்ளே சொல்லி பார்த்துக்கொண்டு இருப்பேன் என்கிறார் இந்த சுட்டிகுழந்தை தன்ஹி.
தொடர்ந்து தன்னால் புதிய சாதனையை படைக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தவுடன் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வலைதளத்தில் தனிமங்களின் பெயர்களை மனனம் செய்து ஒப்புவிப்பது வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார் சிறுமி தன்ஹி.
இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று குழந்தையின் திறமை தற்பொழுது புதிய வேர்ல்டு ரெக்கார்டு ஆக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுட்டி குழந்தை தன்ஹி பேசும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன் இப்போது நான் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் ஹோல்டர் என்கிறார். நான் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்த செய்தியை கேட்டவுடன் எனக்கு அழுகையே வந்து விட்டது. இது எனது பெற்றோருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் மற்றும் இந்த மகிழ்ச்சியான செய்தியை நான் எனது தாத்தா பாட்டி மற்றும் எனது ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
நிறைய குழந்தைகள் மூன்று வயதில் தான் தெளிவாக பேசவே கற்றுக்கொள்வார்கள். இந்நிலையில் சிறுமி தன்ஹி ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.




