வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி 26ஆம் தேதி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னதாக, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்தது. இதற்கு மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த இட இதுக்கீட்டு அரசாரணையை ரத்து செய்தது. அப்போது, “சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்கள் தொகை, சமூகக் கல்வி நிலை மற்றும் பிற சேவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் ஆகிய தரவுகளும் இல்லாமல் இந்தச் சட்டம் அரசால் இயற்றப்பட்டுள்ளது” என கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இதனிடையே 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில், பல்லாயிரக்கணக்கானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்.
இந்த சூழலில் தமிழக அரசு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டை மீறவில்லை. மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முஸ்லீம் மற்றும் அருந்ததி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது தவறானது. இந்த உத்தரவால் தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.