எத்தனை முதல்வர்கள் வந்துபோனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை என்று நித்தியானந்தா வேதனை தெரிவித்துள்ளார்.
யாருக்கும் தெரியாத, பார்த்திராத கைலாஷ் என்ற நாட்டில் வசிப்பதாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருபவர்தான் நித்தியானந்தா. எப்போதும் தேவையில்லாத விஷயங்களை மட்டுமே பேசும் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சென்னை வெள்ளத்தை பற்றி பேசியுள்ளார்.
நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், “முகநூலில் மீம்ஸ் ஒன்றை பார்த்தேன். அதில், சில ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தைப் பார்வையிடுகிற மாதிரியும், அதற்கு பிறகு முதல்வரானவரும் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தைப் பார்வையிடுவது மாதிரி இருந்தது. இந்த மாதிரி வேற வேற முதல்வர்கள் வேட்டியை மடித்துக் கொண்டு சென்னை வெள்ளத்தைப் பார்வையிடுகிற போட்டோக்கள் இணைக்கப்பட்டு இருந்தன. எத்தனை முதல்வர்கள் வந்துபோனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை. அதாவது அடிப்படையான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. தண்ணியோட வீட்டில் நாம் வீடு கட்டியதால், இப்போது நம்ம வீட்டில் தண்ணி வீடு கட்டியுள்ளது” என்று சொல்லி கலகலவென சிரித்தார் நித்தியானந்தா.
தொடர்ந்து பேசிய அவர், “மழை வெள்ளத்தை பெரிய பெரிய ஆளுங்க வந்து பார்வையிட்ட உடனே, நம்முடைய கவனம் திசை மாறிவிடுகிறது. இதுவும் ஒரு பிரச்சினை. இந்த மீம்ஸை பார்க்கும்போது, இத்தனை ஆண்டுக் காலமாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை அல்லது பிரச்சினை முற்றி போய்விட்டது என்பது தெரிகிறது. மழை அடிக்கிற மாதிரி அடிக்கும், நம்ம அழுகிற மாதிரி மாதிரி அழணும். நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும். இது அடுத்த வருஷமும் நடக்கும். அவ்வளவுதான். எங்கோ இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பை இழந்துவிட்டோம். அதுதான் பிரச்சினை.
வாழ்க்கை மிக பெரியது. மூடகங்கள் (ஊடகங்கள்) கொடுக்கின்ற பொழுதுபோக்கிலே வாழ்க்கையைக் கழிச்சுராதீங்க. மூடகங்களின் பொழுதுபோக்கில் வாழ்க்கையைத் தொலைக்க முடியுமே தவிர, கண்டுபிடிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரச்சினையைப் பெரிதாக பூதாகரமாக்கி உங்கள் முன் நிறுத்துவார்கள். மற்றொரு பிரச்சினை வந்தவுடன், இதை விட்டுவிட்டு அதை முன் நிறுத்துவார்கள் என குற்றம் சாட்டினார். உங்களுடைய பொழுதை போக்கிட்டு இருக்கிறதுதான் அவர்களின் பொழுது. இதில் அவர்கள் வளரலாம், நாம் வளர முடியாது. யாரோ ஒருவரால் நம்முடைய பிரச்சினை தீர்ந்து விடும் என்று நம்புவதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம். நாம் வாழ்க்கையை மாற்றுவதும், பிரச்சினையைத் தீர்ப்பதும் நம் கையில்தான் உள்ளது” என்று அதிரடி காட்டியுள்ளார் நித்தி.