
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றபோது பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஆனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரத்தில் இருந்து சித்தூர் நகரி பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 52 பேர் வரை பேருந்து ஒன்றில் பயணித்தனர். பேருந்து பக்ராபேட் என்ற இடத்துக்கு சென்றபோது, பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் 45 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு நடந்த இந்த விபத்தின் போது, பேருந்தில் இருந்த பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து கவிழிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பதி காவல்துறை, விபத்து நடந்த காரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றன. இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




