‘தலைநிமிரும் எண்ணமே மாணவர்களுக்கு இருக்க வேண்டும்; தற்கொலை எண்ணமல்ல’ என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். விழாவில் பேசிய முதலமைச்சர், “அண்மைக்காலமாக நடந்த சில நிகழ்வுகள் (கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மாணவி இறப்பு) எனக்கு மனவேதனையை தருகிறது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மன உறுதி வேண்டும். பட்டம் மட்டும் போதாது, சோதனையை வெல்லும் ஆற்றல் பெற்றோராக மாணவர்கள் இருக்க வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மாணவிகளுக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக இழிசெயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.உறுதியாக நடவடிக்கை எடுக்கும். மாணவிகள் அறிவுக்கூர்மை, உடலுறுதி, மனஉறுதி கொண்டோராக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை, கனவு. ஆசிரியர்கள் எப்போதும் மாணவ, மாணவியருடன் இணைந்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலை நிமிரும் எண்ணமே வேண்டும். உயிரை மாய்க்கும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனைதான் தேவை” என்று பேசினார்.
-பா.ஈ.பரசுராமன்.