கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் வதந்தி பரப்பிய 63 யூட்யூப் சேனல்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன்,வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கூறியதாவது, கலவரத்தின் போது வதந்திகளை பரப்பி ஊடக விசாரணை நடத்திய 63 யூட்யூப் சேனல்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்களில் உள்ள பதிவுகளை நீக்கவும், முடக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் முடிவெடுக்கலாம் என அனுமதியளித்தார். பின் வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.