பி.எஸ்.-4 ரக வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்ட பி.எஸ்.-4 வாகனங்கள் குறித்து நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்தார். மேலும், வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்புடையது அல்ல என நீதிபதிகள், மறு உத்தரவு வரும்வரை BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உத்தரவிட்டனர். BS-4 ரக வாகனங்களை விட BS-6 வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும் என்பதாலும், BS-6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளதாலும், BS-5 என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-6 விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள் BS-6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.