இரவின் பிடியிலிருந்து பகலின் மெல்லிய வெளிச்சம் லிடுதலையாகி விடியல் வாசனையோடு வரும் கதிரவனின் மிதமான கதிர்வீச்சுகளும். வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்று நீரிலிருந்து வரும் இதமான குளிர் கலந்த காற்றும். வீட்டின் எதிரே உள்ள சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலும் மேனியை தழுவியது உணர்ந்து அவரஅவசரமாக தரையில் விரித்து படுத்திருந்த பாயிலிருந்து எழுந்தாள் சின்னப்பொண்ணு..
அன்று வெள்ளிக்கிழமை வேறு. மணி ஒன்றும் பெரிதாக ஆகியிருக்கவில்லை காலை ஏழு மணி வாக்குதான் இருக்கும். ஆனாலும் வெள்ளிக்கிழமை என்றால் அதிகாலையிலேயே எழுந்து வீடு வாசல் பெருக்கி வீட்டின் மண் தரைக்கும் அடுப்பிற்கும் சாணம் மொழுகி அதற்கு கோலமிடுவது இவளது வழக்கமான செயல். அது போல வழக்கமான ஒன்று இன்று நடக்க சற்ற தாமதம் ஆனதை நினைத்து ”அடக்கடவுளே சூரியன் உதிச்சு இம்புட்டு நேரமானது கூட தெரியாம இப்படி துாங்கிட்டேனே..” என்று மனதுக்குள் நினைத்தவள் வேகமாக சென்று வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றில் லேசாக ஓடிக்கொண்டிருக்கும் நீரில் முகம் கை கால் கழுவிவிட்டு வாசலை பெருக்கி அதற்கு கோலம் என்ற பெயரில் தன்னிடமிருந்து கோலமாவால் ஏதோ ரெண்டு கோட்டை .இழுத்துவிட்டு கோலமிட்ட திருப்தியில் வீட்டிற்கு உள்ளே நுழைந்தவள் பக்கத்து வீட்டிற்கு சென்று கொஞ்சம் மாட்டு சாணம் எடுத்து வந்து கரைத்து வீட்டின் தரையையும் அடுப்பையையும் மொழுகி கோலம் என்ற பெயரில் அவைகளுக்கும் ரெண்டு கோட்டை இழுத்து விட்டாள். வயது ஏற ஏற அசதியும் கூடி விடுகிறது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வீட்டிலிருந்த விறகடுப்பை பற்ற வைத்து வழக்கமாக காலையில் அவள் குடிக்கும் இஞ்சித்தண்ணி போட ஆரம்பித்தாள்.
சின்னப்பொண்ணுவின் கணவன் பத்து வருடத்திற்கு முன்பே இறந்து விட்டான். ஆரம்பத்தில் குடிசைபோல் இருந்த வீட்டை அவளும் அவள் வீட்டுக்காரணும் சேரந்து அவர்களது உழைப்பில் கொஞ்சம் மாற்றி நான்கு பக்கம் சுவர் வைத்து கீற்று போட்டு கூரை வீடாக மாற்றினார்கள். அப்போது கூட சில பேர் “”ஏம்பா இது ஆத்து பொறம்போக்கு எடம்பா நாளை பின்ன ஏதாச்சும் ரோட்ட அகல படுத்துறேன் அது பண்றேன்னு அரசாங்கத்துல ஏதாச்சும் பண்ணுனா ரெண்டு பொட்ட புள்ளைய வச்சிருக்கிற ஒனக்கு சங்கடமா போயிடும்பா…. வேற எங்காச்சும் ஊருக்கு உள்ளார போயி வீட்ட கட்டிக்கப்பா..” என்று சொன்னபோது ”அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது வேற எங்க போனாலும் இந்து ஆத்து நீரும் இதிலேர்ந்து வர்ற காத்தும் ரோட்டு வாக்குல இருந்து நாலு பேர பார்க்கிறதில இருக்கிற.. சந்தோஷமும் கெடைக்குமாங்க…..” எல்லாத்துக்கு மேல நாங்க எடம் வாங்கி வீடு கட்டுற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லீங்க… என்றவன் சில ஆண்டுகளில் இந்த உலகத்தை விட்டு போய்சேர்ந்து விட்டான்.
ஏதோ அவன் சொன்னது மாதிரி வெகுகாலம் ஏதும் நடக்கவில்ல. அவள் வீட்டுகாரன் இறந்த பிறகு சின்னப்பொண்ணுவிற்கு ஆற்றங்கரையோடு ஒட்டி வாழும் ரோட்டோர வாழக்கை இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்றளவிற்கு பழகிப்போனது.
அன்று முதல் அந்த கூரை வீடு தான் அவளுக்கு எல்லாமே. சின்னப்பொண்ணுக்கு சொத்து என்று பெரிதாக ஏதும் இல்லை ரெண்டு பெண் பிள்ளைககள் அதையும் திருமணம் செய்து கொடுத்து விட்டாள். இப்போது அவளுக்கு இருக்கும் சொத்து அவளது சிறிய கூரை வீடும் உழைத்து பிழைப்பதற்கு அவளுக்குள் இருக்கும் கொஞ்ம் உடல் தெம்பும்தான் வேறு ஒன்றும் அவளிடம் இல்லை. உழைத்தால் சோறு இல்லையென்றால் பட்டினி தான். இப்படிதான் அவள் வாழ்க்கை நகரந்து கொண்டிருந்தது. தனியாக இருக்கும் அவளுக்கு ஆறுதலாக இருப்பது அவள் வீட்டு வாசல் புற சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சலும் தினந்தோறும் அதில் நடந்து செல்லும் பல்வேறு விதமான மக்களின் முகங்களை பார்ப்பதும் அவர்கள் பேசிக்கொண்டு செல்லும் சப்தங்கள் மட்டும்தான்.
அடுப்பிலிருந்த இஞ்சித்தண்ணியை இறக்கி வடிகட்டி டம்ளரில் ஊற்றி ஆற்றி குடித்து விட்டு கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கியும் எதிரில் கண்ட தெரிந்த முகங்களிடம் நாலு வாரத்தை பேசிவிட்டு வீட்டிற்கு வந்தவள் குளித்து விட்டு அப்படியே வேறு உடை மாற்றிக்கொண்டு பானையிலிருந்து ராத்திரி வைத்த பழைய சாதத்தை எடுத்து ஒரு குண்டானில் ஊற்றிக்கொண்டு தொட்டுக்கொள்ள பழைய குழம்பையும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவள் வீட்டிற்கு எதிரே செல்லும் சாலையில் நாலைந்து ஜீப்புகள் வந்து நின்றது.
சின்னபொண்ணு வீட்டிற்கு வெளியில் வந்து பார்ப்பதற்குள் அருகில். உள்ள மக்களும் கூடி விட்டனர். என்ன ஏதென்று விசாரித்த போது ””ரோட்டை எக்ஸ்டன்ட் பண்ணப் போறாங்களாம் அதான் அளக்க வந்திருக்காங்க..” என்ற விபரம் தெரிந்த. சிண்ணப்பொண்ணு அருகில் நின்ற படித்த அந்த பையனிடம் கேட்டாள் ””தம்பி என்னத்துக்குப்பா இந்த காரெல்லாம் வந்து நிக்கிது…… என்றாள். ”பாட்டி ”அது கார் இல்ல ஜீப்பு…” என்று அவன் சிரித்தான். ஏதோ ஒன்னுப்பா விவரத்த சொல்லு . இந்த ரோட்ட எக்ஸடண்ட்” பண்ண போறாங்களாம்
”அப்படின்னா..”
”ரோட்ட பெரிசாக்க போறாங்களாம்..”
”அதனாலென்ன பண்ணிட்டு போவட்டுமே நல்லது தான்” என்றாள் சின்னப்பொண்ணு
”என்ன பாட்டி புரியாம பேசுற… ரோடு பெரிசானா உங்க வீடு எங்க வீடுன்னு இங்க இருக்கிற எல்லோர் வீட்டையும் எடுத்துடுவாங்க..” என்று அந்த பையன் சொன்னதும் சின்னப்பொண்ணுக்கு உள்ளுக்குள் அப்போதுதான் லேசான உதறல் எடுக்க ஆரம்பித்தது. அன்றைய பொழுது வயற்காடு டீக்கடை என எல்லா இடங்களிலும் ரோட்ட அகலப்படுத்தப் போறாங்களாம்பா.. குடியிருக்கிறவன் எங்க போறதுன்னு தெரியல… ”
”அதான் வேற எடத்துல வீடு கட்டி தர்றேன்னு சொல்றாங்களப்பா..”
”என்னதான் வேற எடத்துக்கு போனாலும் கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு பொறந்து வளர்ந்த எடத்துல வாழுறதுல இருக்கிற திருப்தி கெடைக்குமாப்பா…”பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடைவை இப்படிதாம்பா வந்து அளவெடுத்தானுங்க ஆனா ஒன்னும் நடக்குல சும்மாப்பா இதெல்லாம்…””இருந்தாலும் நாம இருக்கிறது ஆத்து பொறம்போக்குன்னு சொல்றாங்களே..”
””எதா இருந்தா என்னப்பா ஒன்னும் நடக்காது” என்று இதைப்பற்றிய பேச்சாகவே ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை அரசு இயந்திரம் விரைவாக செயல்பட ஆரம்பித்தது. ஆற்றங்கரையில் குடியிருந்த குடியிருப்புகளை காலி செய்துவிட்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் புதிதாக குடியிருப்புகள் கட்டி அதில் இந்த மக்களை குடியமர்த்துவது என்பது திட்டவட்டமானது.
அதற்கேற்றார் போல் அரசின் பணிகள் விதிமுறைகள்ப்படி விரைவாக நடக்க ஆரம்பித்தது. ராட்சத எந்திரங்கள் மூலம் சாலையை விரைவு படுத்துதல் பணி புதிய குடியிருப்புகளை விரைவாக கட்டும் பணி என அனைத்து பணிகளும் ஏழெட்டு மாதங்களில் முடிவடைந்தன. ஆற்றங்கரையிலிருந்து காலி செய்யப்பட்ட மக்கள் புதிதாக கட்டப்பட்டிருக்கும் தொகுப்பு வீடுகளில் குடியேறும் விழா அன்று அங்கு நடைபெற்றது.
சிறிய அளவிலான தொகுப்பு மாடி வீடுகள் அனைவருக்கும் கட்டித்தரப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வீடு ஒதுக்கப்பட்ட அனைத்து மக்களும் அங்கு போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.. ஆனாலும் எல்லோர் மனதிலும் ஒரு ஆர்வமோ மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஏதோ இழக்கக்கூடாததை இழந்து வந்தது போல் மனதில் ஒரு வித பாரத்துடன் கண்களில் லேசான கண்ணீர் துளிகளோடு அங்கு அமர்ந்திருந்தனர்.
பெரிய பெரிய அதிகாரிகள் உள்ளுர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைவரும் விழாவில் பேசினார்கள். இறுதியில் உரிய நபர்களுக்கு அந்தந்த வீடுகளுக்குரிய சாவியை உள்ளுர் அரசியல் தலைவர் மூலம் கொடுத்தார்கள். எல்லோருமே சோக முகத்துடன் வாங்கிச்சென்றார்கள்.
சின்னப்பொண்ணுவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி மனதில் ஏதேதோ நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது. அவள் கண்களுக்கு தன் எதிரே இருந்த கூட்டமோ மாடி தொகுப்பு வீடுகளோ தெரியவில்லை மாறாக அவள் மனம் முழுதும் அவள் முன்பு வாழந்த கூரை வீட்டின் ஞாபகமும் அந்த வீட்டில் தன் கணவன் மகள்களோடு வாழந்த சந்தோஷkக வாழ்நத தன் இரு மகள்களையும் அந்த வீட்டில் வைத்து திருமணம் செய்து மருமகன் பேரப்பிள்ளைகளோடு இந்த சிறிய இடத்தில் உறவுகளோடு மகிழ்ந்த தருணங்கள் மட்டுமே அவள் நினைவுகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் சின்னப்பொண்ணு பெயருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் சாவி கொடுப்பதற்காக அவள் பெயர் அழைக்கப்பட்டது ஆனால் அவள் மனம் பழைய நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்ததால் அவளுக்கு அது காதில் விழவில்லை அவள் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பெண் ””இதப்பாரு சிண்ணப்பொண்ணு அக்கா.. ஒன்னதான் கூப்பிடுறாங்க போ..” என்றதும் சுயநினைவுக்கு வந்தவளாக எழுந்து சென்று அந்த தலைவரிடமிருந்து சாவி வாங்குவjற்காகச் செல்லும்போது மனதிற்குள் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போல் இருந்தது. கைககள் நடுங்கிகொண்டிருந்தது. கண்களில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கனத்த மனதுடன் எழுந்து சென்றவளிடம் தலைவர் ஆறுதல் படுத்தி பேசிவிட்டு அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டின் சாவியை அவளிடம் கொடுத்தார். கைளில் சாவியை வாங்கியவள் அப்படியே தரையில் துவண்டு விழுந்தாள். அருகில் நின்றவர்கள் அதிர்ச்சியாக ஓடிவந்து துாக்கிய போது அவள் உடலில் உயிர் இல்லை. அவள் கழுத்தில் போட்டிருந்த அந்த பழைய கவரிங் செயினில் கோர்த்திருந்த அவள் பழைய வீட்டின் சாவி மட்டும் கீழ்புறமாக தொங்கி லேசாக அசைந்தது.
————-*****———–