அவளைக் காணும் போதெல்லாம் வெறுப்புடன் கணவன் உதிர்க்கும் வழக்கமான வசைச்சொற்கள் தான் என்றாலும் சரசுவுக்கு அன்று மனசு அதிகமாகவே வலித்தது.எப்போதும் போல் கணவன் எழுந்ததும் அப்போதைக்குப் புதிதாக டிகாக்ஷன் போட்டு புதிதாகப் பால் காய்ச்சி அளவாக சர்க்கரை போட்டு அவனுக்குன்னு ஸ்பெஷலாக காபி தயாரித்து நுரை ததும்பக் கலந்து கொண்டுபோய் கொடுத்தவள், “” நேற்றெல்லாம் உடம்பு வலி என்று சொன்னீர்களே .. இன்று ஞாயிற்றுக் கிழமையே ,ஆபீஸ் லீவுதானே.நல்லெண்ணையில் இஞ்சி மிளகு மஞ்சப்பொடி தட்டிப் போட்டுகாய்ச்சி வெச்சுருக்கேன் …ஆற அமர குளிங்க. மிளகு குழம்பும் பூண்டு ரசமும் மணித்தக்காளிக் கீரைக் கடைசலும் செய்யறேன். சாப்பிட்டு ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ” என்று சொன்னதில் என்ன தவறு…
“சரி சரி …எப்பப் பார்த்தாலும் சமையல் பத்தியும் அந்த மளிகை பொருட்களை வெச்சு ஒரு மருத்துவக் குறிப்பு வேறே……வாணி ராணி சீரியல் ராணி மாதிரி…கொஞ்சமாவது படிப்பு சம்மந்தமா பேசத் தெரியுதா.. என் தலையெழுத்து.. போ போ என்னத்தையோ செய்னு எரிந்து விழுந்தான். பத்தாம் வகுப்பிற்குமேல் அவள் படிக்கவில்லை என்பதுதான் அவனுக்கு அவள் மேல் ஒரு தீராத கடுப்புணர்வு.
என்னுடைய கல்வித்தகுதி தான் தெரியுமே .அப்புறம் ஏன் சம்மதிக்கணும்.அவருக்குப் பிடித்த நிறைய படித்த பெண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணியிருந்திருக்க வேண்டியது தானே. எண்ணி எண்ணி குமைந்த மனம் அந்தக் கல்யாணநாளையும் நினைவுக்கு கொண்டு வந்தது.
காலையிலிருந்து தொடர்ச்சியாய் நடந்த சம்பிரதாயங்கள் முடிந்து இருவரும் தனிமைப் படுத்தப் பட்ட இரவு நேரம். கணவனைப் பற்றிய ஒரு இனிய கற்பனையும் எதிர்பார்ப்புமாய் பரவசம் கலந்த வெட்கத்துடன் காத்திருந்த புது மனைவி சரசுவிடம். சேகர் பேசிய முதல் வார்த்தைகள்…”ஏன்சரசு நீ பத்தாவதுக்குமேல் படிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமில்ல. பெயரிலேயே சரஸ்வதி இருக்காளேன்னு நெனைச்சுட்டாயா..”கொஞ்சம் அசட்டுச்சிரிப்பில் தன் அதிருப்தியையும் கலந்து கேட்டான்..
எடுத்த எடுப்பில் புதுக் கணவன் இப்படியொரு கேள்வி கேட்பான் என்று சரசு எதிர்பார்க்கவே இல்லை…”அது வந்துங்க… நான் பத்தாவது படிக்கும்போது எங்கம்மா இறந்துட்டாங்க. வீட்டையும் அப்பாவையும் பார்த்துக்க வேண்டியிருந்தது. அதான் மேல படிக்க முடியல. ‘”
பயந்து கொண்டே திக்கித் திணறி பதில் சொன்னாள்.
அன்று அதன் பிறகு அவன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அவளின் குறைவான படிப்பை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அதுதான் இன்று வரையில் நிஜம்.கல்யாணம் ஆகி பதினெட்டு வருஷங்கள் ஆயிற்று . குழந்தைகள் ரவி பன்னிரண்டாம் வகுப்பும் ,யுவஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
இன்னமும் தினமும் அவள் குறையை சுட்டிக்காட்டிப் பேசி நோகடிக்கிறான். சுய பச்சாதாபத்தில் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மழையாய் வழிந்தது..
.சே …நான் ஏன் இவ்வளவு தூரம் என்னை வருத்திக்க வேண்டும். அவர் ஆத்தாமைக்கு அவர் எதையோ சொல்லிக்கொண்டு போகட்டும். அதையெல்லாம் நான் இனி பொருட்படுத்தவே கூடாது.என் கடமையை நான் குறைவில்லாமல் செய்யணும்..அவ்வளவுதான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.
மாமனார் ,மாமியாருக்கு கஞ்சி தாயாரித்து அவர்கள் அறைக்கு எடுத்துக் போனாள்… அங்கேஅவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சேகர் அவளைக் கண்டதும் “அதென்ன நீ வந்தாலே கூடவே சமையல் வாசனையும் வருதே. இயற்கையாகவே உன்கிட்ட அப்படி ஒரு வாசனை இருக்கா …இல்லை நாள் பூரா சமையல் பொருட்களோடு உறவாடுவதாலா ….திருவிளையாடல் முத்துராமன் மாதிரி எனக்கும் இந்த சந்தேகம் ” கேலியாகக் கைகொட்டிச்சிரித்தான் .
“சரசும்மா, நீ வீட்டிலேயே கஞ்சிப் பொடி தயாரித்தேயில்லையா,அதான் கஞ்சி மணமா சுவையா இருக்குனு ” சொல்லிண்டே கஞ்சியைக் குடித்து முடித்த மாமியார் ,மகனிடம் அவளுக்காய் பரிந்து பேசினார்.
“போடா எப்போ பாத்தாலும் என் மருமகளை ஏதாவது சொல்லிண்டு..நீ ஒரு வேலை செய்வதில்லை.நீ .சாப்பிட்டத் தட்டைக் கூட கழுவுவதில்லை. கடைகண்ணின்னு வெளிவேலையும்பாத்துண்டு . வீட்டு வேலையையும் கவனிச்சுண்டு வேளா வேளைக்கு அவள் . உணக்கையாய் சமைச்சுப் போட்டா பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வழிச்சு வழிச்சு முழுங்குவே.பெருசா பேச வந்துட்டே.
“போம்மா நீ பேசுவே…எனக்குப் படிச்சப்பொண்ணுதான் வேணும்னு நான் எத்தனை சொன்னேன் ..கேட்டியா பொண்ணு நல்லா லட்சணமாயிருக்கா. நல்ல குடும்பம் ..அப்படி இப்படின்னு சொல்லி இவளை என் தலையில் கட்டிட்டே..”
அந்த சமயம் வாசல் அறையில் படித்துக் கொண்டிருந்த ரவி வந்து ‘அம்மா, கணக்கில்ஒரு சந்தேகம் …எங்க வாத்தியார் அடுத்த தெருவில் தான் இருக்கிறார்.அவரிடம் போய் கேட்டு வருகிறேன்.” என்றான்.
” சரிடா கண்ணா, நீ போறதுக்கு முந்தி தாத்தாவுக்கு குளிக்க வெந்நீர் விளாவி வெச்சுட்டு போப்பா.” என்று சொன்னதும், ஒகேம்மா என்று பதிலளித்துக் கொண்டே பாத் ரூமுக்கு ஓடினான் ரவி..
“ஹூம், பாரு அநியாயத்தை, பொதுத் தேர்வுக்கு ஒரு மாதம் தான் இருக்கு.இப்போ போய் சந்தேகம் கேட்க வாத்தியாரைத் தேடிண்டு ஓடறான்.அம்மாக்காரி படிச்சிருந்தாத்தானே
குழந்தைகளுக்கு சொல்லித் தர முடியும்.இதில படிக்கிற பையனை வேலை வேறு வாங்கறா.”
.சேகர் புலம்பிக் கொண்டே அங்கிருந்து அகன்றான்.
சரச சொன்ன படி குளித்து பத்திய மாய் சாப்பிட்டு தூங்கி எழுந்தான் சேகர். உடம்பு லேசாக வும் சுறுசுறுப்பாயும் இருந்த து. நண்பன் அசோக் வீட்டுக்கு ப்போய் அரட்டை அடிச்சுட்டு வரலாம். அவன் மனைவியும் அரசியல், சினிமாஎல்லாவற்றையும் பற்றி நன்றாகப்பேசுவாள்.. எம் ஏ படித்தவள்.. ஷி இஸ் கிரேட்..
குஷியாக சிறு தானிய தோசை டிபனும் சுக்கு டீயும் சாப்பிட்டான். ஹாலில் ரவி தானும் படித்து க் கொண்டு தங்கைக்கும் அவள் பாட சம்பந்த மாய். சொல்லி க் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஹூம். அம்மா படிக்கல்லேன்னா. பசங்க இப்படி த் தாங்களே திண்டா ட வேண்டியதுதான். சேகர் சொன்ன தும் அவன் அம்மாவுக்கு ரொம்பவே கோபம் வந்தது.
“என்ன டா சும்மா சரசு மேலேயே பழி போடறயே. நீ தான் எம் பி ஏ படிச்சிருக்காயே
. நீ உன் பசங்க ளுக்கு சொல்லிக் கொடேன் “என் றாள்.
“ஆ ஊன்னா அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்துடுவியே. அதெல்லாம் அம்மாக்காரிதான்பாத்துக்கணும். “மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஸ்கூட்டரில் ஏறிச்சென்று விட்டான்.
அன்று பிளஸ் டூ ரிசல்ட் வந்து விட்டது…கணினியில் ரவி பார்த்துக்கொண்டிருக்கும் போதே
அவன் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.ரவிதான் பள்ளியிலேயே
முதல் மாணவனாம்.99 % மதிப்பெண்களாம்..சராசரி மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணினாலே அதிசயம் என்று எதிர்பார்த்த சேகருக்கு நம்பவே முடியவில்லை.
சிறிது நேரத்தில் ரவியின் வகுப்பு ஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்எல்லோரும் ரவியைப் பேட்டி காண வீட்டுக்கே வர,. செய்தி தெரிந்து மீடியாக்காரர்களும் சூழ்ந்து கொள்ள ,
ஆசிரியர்கள் ரவிக்கு வாழ்த்துச்சொல்லி பேட்டியைத் தொடங்கினர்.
” ரவி உன்னால் எப்படி இந்த அளவு வெற்றி பெற முடிந்தது…இந்த வருடம் கணக்குத்தேர்வு மிகவும் கடினமாயிருந்தது என்று எல்லாரும் சொன்னார்களே.நீ அதில் முழு மதிப்பெண் பெற்றிருக்கிறாய். எப்படி உன்னால் முடிந்தது … என்று ஆசிரியர்கள் கேட்க, அவர்களைவிடவும் சேகர் ரவியின் பதிலுக்காய் ஆவலுடன் காத்திருந்தான்.
“என்னுடைய இந்த வெற்றிக்கு எங்கம்மாதான் சார் முழுக்க முழக்க காரணம் “என்று ஒரே போடாகப் போட்டான் ரவி.
ஹாங் …என்ன உளறுகிறான்,…சேகர் திகைக்க , ஆசிரியர்கள் கேட்டனர் …”உன்னம்மாதான் வீட்டில் உனக்கு சொல்லித் தருவார்களா.
“..என் அம்மா அதிகம் படிக்கவில்லை ….அதனால் அவர்களால் சொல்லித்தர முடியாது. ஆனால் அம்மாவை ரோல்மாடலாக வைத்துத் தான் நான் படித்தேன்.”
“கொஞ்சம் புரிகிறாற்போல் சொல்லப்பா ..”
” அம்மாவின் தினசரிநடைமுறைகள் தான் எனக்கு வழிகாட்டி …அம்மா வேலைகளை ஆர்வமுடன் செய்வார். அதேபோல் நானும் படிப்பேன்.உதவிக்கு என்று யாரையும் நாடாமல் எல்லா வேலைகளையும் தானே செய்வார்..அதை மனதில் கொண்டுதான் நான் டியூஷனெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. பள்ளியில் வகுப்பில் கவனமாயிருப்பேன்.
அம்மா அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரம் காட்டுவார்.அதேபோல் நானும் அன்றன்று நடந்த பாடங்களை அன்றே படித்து ,எழுதி ப்பார்த்து மனதில் பதித்துக் கொள்வேன்.அவ்வப்போது என் தங்கைக்கும் கொஞ்சம் பாடம் சொல்லித்தருவேன் .இது எனக்கு கொஞ்சம் மாறுதலையும் உற்சாகத்தையும் கொடுக்கும். அதனால் எனக்கு இந்தத் தேர்வை எதிர் கொள்வதில் எந்த பயமும் இல்லாமலிருந்தது.
அட…இவன் என்னென்னமோ சொல்கிறானே.வியந்து போனான் சேகர்.
“பேரக் குழந்தைகளைஎங்களுக்காக சிறு சிறு வேலைகளை செய்யச்சொல்லி நெருக்கம் காட்டிப் பழக வைப்பாள் எங்க மருமகள் “என்று சேகரின் அம்மா சொல்லவும்
“ஆமாம் சார் , நம் குழந்தைகளுக்கு உறவுகளின் மேல் பாசமும் கருத்தும் இருக்கவேண்டும் இல்லையா..வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டி யாரோ நாம் யாரோ என்று ஒட்டாமல் இருக்கக் கூடாதில்லையா… அதனால்தான் அவர்களுக்காக சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்துவேன்.”
.” நான் விடிய விடிய, படிப்பேன்..எங்கும் போக மாட்டேன் .. டியூஷன் வைத்துக் கொள்வேன் ” என்பது போன்ற வழக்கமான பதில்களை எதிர்பார்த்த ஆசிரியர்களுக்கு கொஞ்சம் வியப்பாயிருந்தது.
சரசுவையும் புகைப் படமெடுத்தனர். “உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சிறந்த வழிகாட்டியாயிருக்கிறீர்களே. மேலும் இப்போது பள்ளிகளில் சொல்லித்தராத மாரல் வகுப்பு முறைகளையும் அவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள். இந்தப் பேட்டியை அப்படியேபத்திரிகைகளில் போடப்போகிறோம். வாழ்த்துக்கள் அம்மா. நன்றி.”என்று சொல்லி சேகரிடமும், ரவியையும்
,அவன் அம்மாவையும் பாராட்டி விட்டுச்சென்றனர்..
வியப்புக்குள் மூழ்கிக் கிடந்த சேகர் ,படிப்புகுறைவு என்று நான் சதா குழவியாய் கொட்டின என் மனைவிக்குள் இவ்வளவு திறமையா.. தகப்பன் சாமி மாதிரி என் பிள்ளை சொன்னபிறகு தான் எனக்கே புரிகிறது. என்மேல் அன்பாக ,என் பெற்றோருக்கு ஆதரவாக,என் மக்களுக்கு சகோதர பாசமும் , பெரியவர்களிடம் பாசமும் பணிவுமாக இருக்க வேண்டும் என்பதையும்
வாயால் சொல்லாமல் நடந்துகாட்டி… அப்பப்பா..கிரேட்தான். பிரமிப்புடன் நினைத்துப் பார்த்தான்.
என் மனைவி பள்ளிப் படிப்பில் குறைந்தால் என்ன …வாழ்க்கைக்கு கல்வியில் பி ஹெச் டி பட்டம் வாங்கி உயர்ந்து நிக்கிறாளே.
கணவன் என்ன சொல்வானோ என்று தவிப்புடன்அவனையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை த் தோழமையுடன் பார்த்தவன் மனதில் …இவள் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே..குடைச்சல் மறைந்து,இவ்வளவு தெரியுமா என் மனைவிக்கு, என்ற பெருமை நுழைந்தது.
***************