பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். பேருந்துப்பயணமோ, ரயில் பயணமோ எதுவாயிருந்தாலும் ஜன்னலோரம் என்பது எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.
இயற்கையன்னை அள்ளித்தெளித்திருக்கும் அழகுகளையும், வயல்வரப்புகளையும் ரசித்துக்கொண்டே பயணித்தல் சுகமே.
ஆனால் என்னதான் நான் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாலும் என் பார்வை என் கையிலிருக்கும் செல்போன் மீதுதான் இருந்தது. அதற்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறேன்.
செல்போன்தான் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது. தனிமையில் இருக்கிறோம் என்கிற உணர்வு இல்லாமல் உலகமே நம் கைகளில் தவழுகிறதே.
யாருக்குதான் பிடிக்காமல்போகும். இதற்குள் புகுந்துவிட்டால் வெளிவரும் எண்ணம் வருவதேயில்லை. எத்தனை எத்தனை காட்சிகள் கண்களைக் கவர்கிறது. எவ்வளவு விசயங்களை தெரிந்துகொள்ளமுடிகிறது.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவரை, உள்ளூர் செய்திகள் முதல் உலகச்செய்திகள் வரை எவ்வளவு ஆற்றல் நிறைந்ததாய் இருக்கிறது. நினைத்தாலே ஆச்சர்யம் தாங்கவில்லை.
முகநூலில்தான் எத்தனை ஆயிரம் நண்பர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள், உணர்வுகள், வருத்தங்கள், வெற்றிகள், தோல்விகள் அப்பப்பா…அதிசயமான சாதனம்தான் செல்போன்.
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருப்பவனிடம் பேசமுடிகிறது. அதுவும் வீடியோவாக அவனை முகம் பார்த்து அவன் இருக்கும் இடம் பார்த்து பேசமுடிகிறது. இந்த அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி மட்டும் என் கையில் கிடைத்தால் பாராட்டித் தீர்த்துவிடுவேன்.
செல்போன் பற்றிய என் எண்ணங்களுக்குத் தடையாய் கண்டக்டர் வந்து நின்றார். நான் எனக்கான பயணச்சீட்டை வாங்க நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். என்னையும், என் செல்போனையும் முறைத்தபடி, ” எல்லாரும் இப்படி நோட்ட நீட்டுனா சில்லறைக்கு நான் எங்க போவேன்?” என்று எரிந்துவிழுந்தவர், பயணச்சீட்டை மட்டும் தந்துவிட்டு மீதி சில்லறை தராமல் அடுத்த பயணியை நோக்கிச் சென்றுவிட்டார்.
‘மீதியை பிறகு தருகிறேன்’ என்றுகூட சொல்லாமல் அவர் நகர்ந்தது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெரும்பாலும் நடத்துனர்களின் நடவடிக்கைகள் இப்படியானதுதான் என்பது பழகிவிட்டிருந்ததால் நான் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். பின் எனது செல்போனை மறுபடியும் நோண்ட ஆரம்பித்தேன்.
என்னருகில் அமர்ந்திருந்த இளைஞனும் என்னைப்போலவே செல்போனைதான் நோண்டிக்கொண்டிருந்தான். மேலும் கூடுதலாக அவன் காதில் ஹெட்போன் மாட்டியிருந்தான். மற்ற இருக்கைகளில் இருப்போரையும் கவனித்தேன் அனைவரது கரங்களிலும் செல்போனின் ஆக்கிரமிப்பேயிருந்தன.
எனது பக்கத்து இருக்கையில் கணவன் மனைவி இருவருமே ஆளுக்கொரு செல்போனை நோண்டிக்கொண்டிருக்க, அவர்களது குழந்தை ஜன்னலோரமாய் ரசித்துக்கொண்டிருந்தது இயற்கையை.
பேருந்தில் இளையராஜா இசைத்துக்கொண்டிருக்க…
அவருக்குப் போட்டியாக சிலரது கைகளில் ஏ.ஆர்.ரகுமான், யுவன், அனிருத் என இசைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இறைச்சலான இசைகளுடன் தன் பயணத்தில் இருந்தது பேருந்து.
நான் எனது போனில் முகநூலில் மூழ்கியிருந்த நேரம். அப்பாவிடமிருந்து அழைப்பு. இது மூன்றாவது அழைப்பு. முதல் அழைப்புக்கே நான் கிளம்பிவிட்டேன் என்பதை சொல்லியிருந்தேன்.
அதன் பிறகு பதினைந்து நிமிடத்திற்குள் இரண்டாவது அழைப்பில், ” பஸ்ல உட்கார இடம் கெடச்சிதா? தூங்கிடாத. நம்ம ஸ்டாப்பிங்ல பாத்து இறங்கு. பேக் பத்திரம். இறங்குற இடம் வர்றதுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணு நான் வண்டி எடுத்துக்கிட்டு வர்றேன்” போன்ற அனுசரனைக்கு, ” நான் என்ன கொழந்தையா? வைங்க போனை. நான் வந்துடுவேன்” என்கிற எனது எரிச்சலை தந்து போனை கட்செய்துவிட்டு முகநூலைத் தொடர்ந்தேன்.
இப்போது மூன்றாவதாக அழைக்கிறார். ‘எங்க வந்துக்கிட்டிருக்க?’ என்று கேட்பார்.
நான் போனை எடுக்காமலே கட்செய்தேன்.
எனது செல்போனில் சார்ஜ் இறுதிக்கட்டத்தில் கண்சிமிட்டிக்கொண்டிருந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது. “ச்சை…இந்த செல்போன்ல சார்ஜ் தீராதமாதிரி இன்னும் யாரும் கண்டுபிடிக்கலயே” என்று விஞ்ஞானிகளை நொந்துகொண்டேன்.
இன்னும் சில வினாடிகள் நோண்டினால்கூட தன் இயக்கத்தை சுத்தமாக நிறுத்திவிடும் ஆபத்தான கட்டத்தில் எனது செல்போன் திணற,
வேறுவழியில்லாமல் செல்போனை எனது பாக்கெட்டில் வைத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனை கவனித்தேன்.
சமீபத்தில் வெளியான புதுப்படம் ஒன்றை பார்த்துக்கொண்டு வந்தான். நான் ஓரக்கண்ணால் அவன் செல்போனை பார்த்தபடியே வந்தேன். அந்த படத்தின் ஔிமட்டுமே எனக்குக் காட்சியளித்தது. ஒலியை அவனுக்கு மட்டுமே ஹெட்போன் வழியாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தது.
ஆனாலும் விடுவதாயில்லை நான். ஊமைப்படத்தையாவது பார்த்துக்கொண்டு வந்தேனே தவிர ஜன்னல் வழியே வெளியுலகைக்காண எண்ணமில்லை எனக்கு.
அதற்கும் கொஞ்சநேரமே கிடைத்தது. அவன் இறங்கவேண்டிய இடம் வரயிருந்தது. அவன் ஹெட்போனை செல்பேசியை எல்லாம் அணைத்துவிட்டு இறங்க ஆயத்தமானான்.
” அடராமா நீயும் இறங்கப்போறியா?” என்று எண்ணிக்கொண்ட நான் அடுத்து என் பக்கத்தில் உட்காருபவர் யாராக இருந்தாலும் நமக்கு செல்போனைக் காட்டி நம் பொழுதை இனிமையாக்குபவராக வரவேண்டும் என வேண்டிக்கொண்டேன்.
பேருந்து நின்றது. அவன் எழுந்துவிட்டான். நான் வேறு யார் வருவார்களோ என எதிர்பார்த்திருந்தேன். ஜன்னல் வழியேப் பார்த்தேன். ஒரு இளைஞனும் அவனுக்கருகே ஒரு பெரியவரும் பேருந்தில் ஏற தயாராகிக்கொண்டிருந்தனர்.
அப்பாடா அந்த பையன்தான் நம்ம பக்கத்துல உட்காருவான். கண்டிப்பா செல்போனை பார்த்துக்கிட்டுதான் வருவான். வாடா…வாடா..வாடாச்செல்லம் என ஆவலாய்க் காத்திருந்தேன்.
காலத்தின் கொடுமை அவன் பேருந்தில் ஏறவேயில்லை. அந்தப்பெரியவரை ஏற்றிவிட வந்திருக்கிறான். பேருந்தில் ஏறியப்பெரியவர் நேராக என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து அந்த இளைஞனிடம்,
” பத்திரமா போ கண்ணு” என்று என்னைத் தள்ளிக்கொண்டு கையசைத்தார்.
அவனும், ” சரிங்கப்பா நீங்க இறங்கிட்டுப் போன் பண்ணுங்க. பாத்து இறங்குங்க” என்றபடி கையசைத்தான்.
பேருந்து கிளம்பியது. அவர் ஜன்னலில் தெரியும் அவரது மகனையே திரும்பிப் பார்த்து கையசைத்தபடியேயிருந்தார். பேருந்து கொஞ்சதூரம் சென்றபின்னும் பின்னாடி தெரியும் கண்ணாடி வழியாக மகனைப் பார்க்க முயற்சித்துவிட்டு உட்கார்ந்தார்.என்னைப் பார்த்து லேசாய் புன்னகைத்தார். நானும் பதிலுக்கு சிரித்துவைத்தேன்.
” அவன் என் பையன்” என்றார் என்னிடம். அவர் முகம் நிறைய பாசம் வழிந்தது.
நான் தலையாட்டினேன்.
“நல்ல பையன் சார். இதவிட வேற என்ன சார் வேணும் பெத்தவங்களுக்கு” என்றார்.
ஆஹா…இன்னைக்கு இவர்கிட்ட மாட்டிக்கிட்டமோன்னு தோணுச்சி எனக்கு.
நான் அவர் பேச்சை கேட்கிறேனா? இல்லையா? என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. அவர் தொடர்ந்தார்.
” நல்லா படிப்பான் சார். ஒரு டிகிரி முடிச்சிட்டான் பி.எஸ்.சி. அதுக்கு மேலயும் படிக்கட்டுமாப்பான்னு கேட்டான். நீ படிடா கண்ணுன்னு சொல்லிட்டேன். இப்ப என்ன நான் கொஞ்சம் அதிகமா உழைக்கனும் அவ்ளதானே?” என்றார்.
கண்டக்டர் அருகில் வந்ததும் சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டார். சரியான சில்லறையைப் பார்த்ததும் கண்டக்டர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்தடுத்த பயணிகளிடம் அவர் கடுப்படிக்காமல் நகர்ந்தார்.டிக்கெட் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்ட பெரியவர் மீண்டும் என்னைப் பார்த்தார்.
நானும் ‘சரி தொடங்குங்கள் எனக்கும் பொழுது போக வேண்டுமே. நான் இறங்க வேண்டிய இடம் வர இன்னும் அரைமணிநேமாவது ஆகுமே’ என நினைத்துக்கொண்டேன்.
இம்முறை நானே தொடங்கிவைத்தேன்.
” உங்க பையன் பேரென்ன சார்?” என்றேன்.
” மணிகண்டன்” என்றார் தித்திக்கும் உணர்வோடு.
” உங்க பேரு என்ன சார்.?” என்றார் என்னைப்பார்த்து.
‘சுரேஷ் ‘ என்றேன் நான்.
“நீங்களும் எம்பையன் மாதிரி ரொம்ப நல்லவிதமாதான் இருக்கிங்க.” என்றார்.
எனக்கு ஆச்சர்யம் நம்மை பற்றி இவருக்கு என்ன தெரியும்? சும்மா பேசுவோம்னு பேசுறார் போல. என்று நினைத்துக்கொண்டேன்.
சிரித்தேன்.
“ஏன் சார் சிரிக்கிறிங்க?” என்றார்.
“என்னையும் உங்க பையன் மாதிரி நல்லவன்னு சொன்னிங்களே. அத நினைச்சி சிரிச்சேன்” என்றேன்.
” ஆமாம் சார். இங்க பாருங்க. இந்த பஸ்ல எவ்ளோ பேரு இருக்காங்க. யாராவது பக்கத்துல உட்காந்திருக்குறவங்ககிட்ட பேசிக்கிட்டு வர்றாங்களா? ஆளாளுக்கு ஒரு போனை வச்சிக்கிட்டு அதையேதான் பாத்துக்கிட்டு வர்றாங்க. நீங்க மட்டும்தான் போனை பாக்கெட்ல வச்சிக்கிட்டு வர்றிங்க” என்றார்.
என் போன்ல சார்ஜ் இல்லங்கறத சொல்லலாம? இல்ல இந்த பாராட்டை வாங்கிக்கலாமா? ன்னு யோசித்துக்கொண்டிருந்தேன்.
கண்டக்டர் என்னருகில் வந்து எனக்குத் தரவேண்டிய சில்லறை பாக்கியை சரியாகத் தந்துவிட்டு, ” யாருக்காவது சில்லற பாக்கி இருக்கா?” என்று கேட்டபடியே நகர்ந்தார்.
கண்டக்டர் நகர்ந்ததும் அந்தப் பெரியவர் தொடர்ந்தார்.
“எம் பையன்கிட்டயும் போன் இருக்கு சார். ஆனா தேவைக்குதான் உபயோகப்படுத்துவான். வீட்ல அவன் போனை தொடுறதேயில்ல. காலேஜ் முடிஞ்சி வந்த உடனே எங்ககிட்ட உட்கார்ந்து பேசுவான். அவன் எப்ப வருவான்னு நாங்க காத்திக்கிட்டிருப்போம். அவன்கிட்ட பேசுறதுக்கு எங்ககிட்ட நிறைய விசயங்கள் இருக்கும் சார். அவனுக்கும் எங்ககிட்ட பேச ஆயிரம் விசயங்கள் இருக்கும் சார். பேச பேச தீராது” என்றார் சிரித்துக்கொண்டே.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது. என் அப்பா அம்மா நினைவு வந்தது. என்னையறியாமலே என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“பெத்தவங்களுக்கு தன் பிள்ளைகள் பக்கத்துலயே இருந்தா ஒரு பலம் இருக்கும் சார். ஆனா காலம் ஏதோ ஒரு வகைல பிரிச்சிவச்சி வேடிக்கை காட்டும். காலத்துக்கும் கூடவேவா இருக்கமுடியும்? குழந்தைகளும் அவங்களுக்குன்னு படிப்பு, வேலைன்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க. பெத்தவங்களும் பணம் சம்பாதிக்க ஓடிக்கிட்டிருப்பாங்க. இதுக்கு நடுவுல கிடைக்கிற கொஞ்ச நேரத்துல ரெண்டுபேரும் மனம் விட்டுப் பேசிக்கனும் சார். ஏன்னா காலம் ரொம்ப குறைவு சார் அதுக்குள்ள நாம வாழ்ந்துக்கனும்” என்றார்.
நான் அவர் கண்களையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். குழந்தைகள் மீது பெற்றவர்கள் வைத்திருக்கும் பாசத்துக்கு முன்னாடி எதுவுமே உயர்ந்தது இல்லைன்னு சொன்னது அவரது பார்வை.
” நீங்களும் உங்க அப்பா அம்மாக்கூட உட்கார்ந்து பேசுவிங்கன்னு நினைக்குறேன் சார் சரிதானே?” என்றார்.
நான் ” ஆமாம்” என்பதுபோல தலையாட்டினேன்.
“ரொம்ப சந்தோசம் சார்” என்றவர் தன் பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து தன் மகனுக்கு அழைத்தார்.
” கண்ணு… நீ வீட்டுக்குப் போய்ட்டியா?”
….
“ம்…சாப்பிட்டியா?”
….
“சரி கண்ணு. நான் அங்க போனதும் போன் பண்றேன்.”
….
“வச்சிடறேன்.”
என்று வைத்தவர் என்னிடம்,
“இன்னும் சாப்பிடலயாம்” என்றார்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. அவரிடம், ‘ஐய்யா, நான் இறங்கப்போறேன். நீங்க பத்திரமா போய்ட்டு மறக்காம உங்க பையனுக்குப் போன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு எனது பேக்கை எடுத்துக்கொண்டு எழுந்தேன்.
” சரிங்க சார். பாத்து இறங்குங்க” என்று கையெடுத்து கும்பிட்டார்.
நான் அவர் கையை பற்றி அமர்த்திவிட்டு,
‘என்னை சார்னு கூப்பிடாதிங்க. சுரேஷ்னே கூப்பிடுங்க’ என்றேன்.
” சரி சுரேஷ் பத்திரமா இறங்கு” என்றார் சிரித்தபடி.
நான் இறங்கி திரும்பிப்பார்த்தேன். அவர் கையசைத்தார். நானும் கையசைத்துவிட்டு் திரும்பினேன். அப்பா வண்டியுடன் நிற்கிறார்.
” என்னா சுரேஷ் போன் பண்ணேன் நீ எடுக்கல. திரும்ப கூப்பிட்டேன். உன் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அதான் நான் வண்டி எடுத்துக்கிட்டு வந்துட்டேன்” என்றார்.
“சாப்டிங்களாப்பா” என்றேன்.
என்னைப் புதிதாய்ப் பார்த்தார்.
அந்தப் பார்வையில் அந்தப்பெரியவரின் பார்வை தெரிந்தது.
முற்றும்.