தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமையும் இல்லை, சட்ட உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் காலியான இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதில், போட்டியிட மனுதாக்கல் செய்த நிலையில், போதிய எண்ணிக்கையிலான முன்மொழிபவர்களும் வழிமொழிபவர்களும் இல்லை எனக் கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், பேச்சுரிமையும், கருத்து தெரிவிக்கும் உரிமையும் பாதிக்கப்பட்டதோடு தனிப்பட்ட சுதந்திரமும் பாதிப்புக்கு உள்ளானதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமையும் இல்லை. சட்ட உரிமையும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும் (1950), தேர்தல் நடத்தை விதிகளும் (1961) குறிப்பிட்ட வேட்பாளரை வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என வலியுறுத்துகின்றன. அதன் அடிப்படையில் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை அடிப்படை உரிமை மீறலாக கோர முடியாது என்றனர். மேலும், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.