தின்பண்டம் தராமல் தீண்டாமையை கடைபிடித்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த பட்டியலின மாணவர்கள் தின்பண்டம்(தேன்மிட்டாய்) வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றனர். அப்போது, அந்த கடைக்காரர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுக்கக் கூடாது என ஊரில் கட்டுப்பாடு விதித்துள்ளனர் என்று கூறுகிறார். சாதியை பற்றி ஏதும் அறியாத அந்த பிஞ்சு குழந்தைகள் தின்பண்டம் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. பின்னர், தின்பண்டம் தராமல் தீண்டாமையை கடைபிடித்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கடைக்குச் சீல் வைக்கப்பட்டது. முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
’தீண்டாமை ஒரு பாவச்செயல்’
’தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’
’தீண்டாமை ஒரு மனிதமற்றச் செயல்.’
இந்த வாசகங்கள் முதலில் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனதில் பொறிக்கப்பட வேண்டும் என்ற நிலையில்தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு முற்போக்கு மாநிலம், முன்னேறிய மாநிலம் என்று நாம் பிதற்றி கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது இந்த வீடியோ மூலம் நிரூபணமாகிறது.