மாலை வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக மனைவி குரல் எழுப்பினாள்.
‘ஏங்க, மளிகைக் கடைக்குப் போகணும்னு காசு கேட்டேனே எங்கங்க?
“காலைல உன் எதிரில்தானே அஞ்சறைப் பெட்டியின் மேல் அறுநூறு ரூபாயை வைத்துவிட்டுப் போனேன். இப்போ கேள்வி கேட்கிறே!”
அலமாரியிலிருந்த பாத்திரம் பண்டங்கள் ஒன்றுவிடாமல் கீழே இறக்கி வைத்து விட்டுப் பார்த்த போது மேல் அறையின் ,
அந்த மரப் பெட்டியில் பழைய கந்தல் துணிகள் தூள்தூளாய்…. கோணிப்பை தூள்தூளாய்…… சணல் கயிறு துண்டு துண்டுகளாய்…… காகிதங்கள் தூள் தூளாய்…… மெத்தைபோல மெத்தென்று பரப்பி வைத்திருக்க அதன்மேல் ஏழெட்டு எலிக்குட்டிகள் கண்திறக்காத நிலையில் வெளிர் நிறத்தில் புரண்டு கொண்டிருக்க என் கண்கள் அகலமாயின!
அதோ…… அதோ…… அந்த எலிக்குட்டிகளுக்கு அடியில் என்னுடைய 500 ரூபாய் நோட்டு சுக்கல் சுக்கலாய்…… அந்த எலிக் குட்டிகளுக்கு மெத்தையாய்ப் பரவியிருக்க…… ஆத்திரத்தில் ஓங்கிய என் கைகள் அப்படியே கீழே இறங்கின.
தெருக்கோடியில் பாழடைந்த ஒரு பழைய வீடு இடிந்த நிலையில் கருவேல முள்ளும் புதருமாக மண்டிக் கிடந்த அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பெட்டியோடு எலிக்குட்டிகளை வைக்கப்போன எனக்கு ஒரு அதிர்ச்சி.
அந்த முள் புதரில் கண் திறக்காத நிலையில் ஒரு பச்சிளங் குழந்தை மயக்கமுற்றுக் கிடந்தது.
தன்னுடைய குட்டிகளுக்கு உடம்பு வலிக்கக் கூடாது என்று மெத்தை பரப்பிக் குட்டி போட்ட எலி எங்கே?
முள்புதரில் குழந்தையை வீசிவிட்டுச் சென்ற அந்த இராட்சசி எங்கே!