பல இடங்கள் , மதங்கள் , மொழிகளில் இருந்து ‘ என் தேசம் ‘ என்ற ஒரே லட்சியத்தில் இணைந்த 1.4 மில்லியன் வீரர்கள் கொண்ட ராணுவம்தான் நம்முடையது.
உலகில் இரண்டாவது மிகப் பெரிய ஒன்று.
அதில் 470 பேர் கொண்ட ஒரு ரெஜிமெண்ட் ‘மதராஸ் ரெஜிமெண்ட்’ .
இதன் குறிக்கோள்: Swadharme Nidhanam Shreyaha ( தேசப்பணியில் உயிர் துறப்பதே பெரும் புகழ்….)
இதன் போர் முழக்கம் ” வீர மதராசி.. அடி கொல்லு .. அடி கொல்லு”
வாங்கிய பதக்கங்கள் : 304 சேனா மெடல், 36 வீர சக்ரா 27 சூரிய சக்கரா.. இன்னும் பல. அந்த காலத்தில், ஈஸ்ட் இந்தியா கம்பனியை பல இடங்களில் மண்ணைக் கவ்வ வைத்து ஓட ஓட விரட்டிய பெருமையும் இவர்களுக்கு உண்டு.
***
டிசம்பர் 7, 1990 கொடி நாள் இரவு 11:20 இடம் சிலிகுரி ..
‘மதராஸ் ரெஜிமெண்ட்’ தலைவர் கர்னல் சூர்யதேவ் ( பெயர் கற்பனை) தனது குழுவுக்கு நமது சுதந்திரத்தின் பெருமை பற்றியும், வீரர்களின் கடமை பற்றியும், ஊக்க உரையாற்றிக் கொண்டு இருந்தார்.
” Soldiers you all should aim for acquiring ‘Paltan ki Izzat’… , ( வீரர்களே நம் பட்டாளத்தின் பெருமைக்காகவும், மற்ற வீரர்களுக்காகவும், நாட்டுக்காகவும் மனம் உவந்து உயிர் விடுவதே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும்.. )
அனைவரும் அவரின் வீர முழக்கத்தில் ஆழ்ந்திருக்க, இரண்டாவது வரிசை , இடது ஓரம் அமர்ந்திருந்த விக்ரம் மனதில் மட்டும் நேற்று ராணுவ தணிக்கை செய்த பின் வந்த துர்கா வின் கடிதமே சுழன்று கொண்டு இருந்தது.
தியாவை முதல் வகுப்பில் சேர்த்து விட்டாளாம் . சின்னவன் ஆதவ் குட்டி தானாவே நடக்க ஆரம்பிச்சுட்டானாம்.. நிறைய பேசரானாம் .. அடிக்கடி என்னோட படத்தைப் பார்த்து ‘ அப்பா’ ன்னு சொல்லரானாம்..
கடன் வாங்கி கட்டின புது வீடு கூட ரெடியா இருக்கு, நீங்க வந்தா கிரக பிரவேசம் பண்ணிடலாம்னு எழுதி இருக்கா.
இரண்டு வருடம் முன்பு வரை, குடும்பத்தோடு கான்பூர் கன்டோன்மென்ட்டில் இருந்தவன் பதவி உயர்வால், இங்கே தனியே வர வேண்டியதாகி விட்டது.
கொடி நாளுக்கு அடுத்த நாள், விடுப்பு கேட்ட போது, “நாளைக்கு , காஷ்மீர் சியச்சென் கேம்பில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நீ லீவு எடுத்துக்கோ” என்று கர்னல் சொல்லி இருந்தார்.
அதற்காக, அடுத்த நாள் ஸுபேதார் சசிதரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிய விக்ரமின் ஜீப் சில மைல்கள் தாண்டியதும் ஒருவன் நிறுத்தி, ” இந்த வழியில் பெரிய பள்ளம் , ஜீப் போகாது . வலது பக்க சாலை வழியே போங்க” என்று திசை திருப்பி விட்டான்.
வலது பக்க சாலையில் சிறிது தூரம் சென்ற உடன் விக்ரமும் ஸுபேதாரும் திடீரென்று காஷ்மீர் தீவிரவாதிகளால் சூழப்பட்டு பிணைய க் கைதிகளாக சிறை பிடிக்கப் பட்டார்கள்.
விக்ரம் கண் முன்னே துர்காவும் குழந்தைகளும் தோன்றி பின் கண்ணீரில் கலைந்து போனார்கள். 251250
சிறையில் உள்ள தங்களின் தலைவரை விடுதலை செய்தால்தான் பிடிபட்ட ராணுவ வீரர்கள் விக்ரம், சசிதர் விடுவிக்கப் படுவார்கள், இல்லை என்றால் 27 நாட்களில் கொலை செய்யப் படுவார்கள் என்று தீவிரவாதிகள் அரசாங்கம், மற்றும் விக்ரமின் குடும்பத்துக்கு மிரட்டல் தகவல் அனுப்பினர்.
துர்கா இடி விழுந்தது போல நொறுங்கிப் போனாள். . நாட்கள் கடந்தன. நடுவில் தீவிரவாதிகள் விக்ரமை வீட்டுக்கு கடிதம் எழுத , தொலைபேசி மூலம் பேச எல்லாம் அனுமதித்தார்கள். ஆனால், அடிக்கடி அவன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.
துர்காவின் உறவினர்கள் எல்லோரும் டெல்லி சென்று அமைச்சர்களிடம் முறையிட்டும் பயனில்லை. கடுமையான அந்த தலைவனை விடுதலை செய்ய அரசு துளியும் இணங்கவில்லை. மாறாக தீவிரவாதிகளை வேட்டையாட துவங்கினார்கள்.
தோல்வியால் வெறுப்படைந்த தீவிரவாதிகள், இறுதியில் ஒரு நாள் , ‘தப்ப முயன்றான் ‘ என்று பொய் கூறி விக்ரமை சுட்டு பாரமுல்லா என்ற இடத்தில் போட்டு விட்டு , வீட்டுக்கும், ராணுவத்துக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள்.
சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க ராணுவ முறைப்படி , தேசியக் கொடிக்குள் வீரன் விக்ரமின் உடல் அடங்கியது.
***
துர்கா மனம் உடைந்து, நடை பிணமாக மாறி, தனியாக வாழ்வை மேற்கொண்டாள். அரசு ராணுவ அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வேலை தர முன்வந்தது. விரக்தியில் துர்கா அதை ஏற்கவில்லை.
குழந்தைகள் தியா, ஆதவ் குட்டி முகம் பார்த்தும் அவள் மன அழுத்தம் குறையவில்லை.
தேவையில்லாமல் தன் இணையை கொன்ற தீவிர வாதிகளின் அந்த குறிப்பிட்ட மதத்தின் மீது தீராத வெறுப்பு , கோபம் எல்லாம் அணையாத தீயாக அவள் மனதில் எப்போதும் எரிந்து கொண்டிருந்தது.
அந்த மதத்தை சேர்ந்த இவளின் உயிருக்கு உயிரான தோழிகளைக் கூட அறவே ஒதுக்கி விட்டாள்.
இந்த நிலையில், துர்காவின் தோழி மேரி, அவளுக்கு ஒரு பார்வையற்ற சிறுவர்களுக்கான தொண்டு இல்லத்தை அறிமுகப் படுத்தினாள். துர்கா அந்த இல்லத்துக்கு சென்று ஒரே ஒரு பார்வையற்ற சிறுவனுக்கு மட்டும் தொடர்ச்சியாக தினமும் ஒரு மணி நேரம் அவன் பாடத்தை அவன் அருகில் அமர்ந்து படித்து காட்டவேண்டும். Braille புத்தகங்கள் எல்லா தனிப்பட்ட பள்ளிகளிலும் இல்லாததால், தொண்டு ஆர்வலர்கள் அங்கு சென்று சிறுவர்களை தேர்வுக்காக தயார் செய்ய இந்த ஏற்பாடு.
” துர்கா, முகம் தெரியாத, முன் பின் அறியாத ஒரு ஆதரவற்ற ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும்போது உன் மன அழுத்தம் , அதீத கோபம், எல்லாம் தானாக மறைந்து போகும் ..”
துர்கா ஆரம்பத்தில் ஒரு இயந்திரம் போல அந்த சேவையை மேற்கொண்டாள். அவளுக்கு இருந்த மன நிலையில் அந்த பையனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளக் கூட முயற்சி செய்யவில்லை.
படிப் படியாக அந்த சேவையில் துர்காவின் மனம் ஈடுபட்டது.
தன்னுடைய குழந்தைகளிடம் துர்கா பாசத்தை பொழிந்தாலும், மேரி சொன்னது போல, பெயர் தெரியாத அந்த பார்வையற்ற ஏழை சிறுவன் நெருக்கத்தில் அவளுக்கு மன அழுத்தம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது.
மனம் லேசாகி அன்பு மலரத் தொடங்கியது.
சிறுவனின் அன்பும், பண்பும், அமைதியும் துர்காவை மிகவும் கவர்ந்தது.
ஆரம்பத்தில் சிறுவனைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ள விரும்பாதவள் இப்போது அந்த சிறுவனைப் பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள ஆசைப் பட்டாள்.
துர்கா, ” தம்பி, இவ்வளவு நாளா நான் உனக்காக படிக்கிறேன். ஆனால் உன் பேரைக் கேக்க கூட எனக்கு தோணலியே.. உன் பேர் என்ன ராஜா? ” என்றாள்.
சிறுவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இவள் கையை லேசாக த் தொட்டு சொன்னான் ..
” அப்துல் கரீம்…”
******************************
மனிதம் மலரும் போது, மதம் உதிர்கிறது…
********************