அந்த மாநகரப் பேருந்து ஒரு சிறிய குலுங்களோடு பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது. அருகிலேயே ‘பொய்க்கால்பட்டி’ என எழுதப்பட்ட இத்துப் போன
பெயர் பலகை ஒன்று, எப்பவோ அடித்த புயல்காற்றின் உதவியால் தலைகீழாய்
தொங்கிக் கொண்டிருந்தது.
” பொய்க்கால்பட்டி இறங்குங்க” நடத்துநரின் கர்ண கொடூர
குரலோசையைக் கேட்டு அந்தப் பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த
இளங்கோ திடுக்கிட்டு கண் விழி த்தான்.
” ஏம்பா…நீதானே பொய்க்கால்பட்டிக்கு டிக்கெட் எடுத்தே. இறங்கலையா?”,
நடத்துநர் தன் விழிகளை ஒரு உருட்டு உருட்டி, இளங்கோவை நோக்கி ஓங்கி
குரல் கொடுக்க, பதறிய இளங்கோ சட்டென பேருந்தை விட்டு இறங்கினான்.
உடன் நடத்துநரின் விசில் சத்தத்தில் அடர்த்தியான புகையை ஏராளமாய்
கக்கியப்படி அந்த பேருந்து கிளம்பிப் போனது.
பேருந்தை விட்டு இறங்கியவன், பச்சை பசேலென பரந்து விரிந்திருந்த
வயல்களின் வரப்புகளில் சிறிது தூரம் நடந்து, செம்மண் பரப்பிய அந்த
ஒற்றையடிப் பாதையை வந்தடைந்தான். தூக்கம் கலையாத விழிகளுடனே
தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் நடந்தவன் தூரத்திலேயே அந்தக் காட்சியை கண்டு
துணுக்குற்றான். சுற்று வட்டார எட்டு கிராமங்களுக்கும் சொந்தமான அந்த
டாஸ்மாக் கடையில் கூட்டம் திமிறிக் கொண்டிருந்தது.
தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் மட்டுமே இந்த
டாஸ்மாக்கில் கட்டுக்கடங்காத கூட்டத்தை அவன் கண்டுள்ளான். ஆனால்
இன்றைய கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு காரணம் இளங்கோவிற்கு
புரியவில்லை. காரணத்தினை அறிந்துக் கொள்ளும் ஆவல் அவனை ஏகத்துக்கும்
உந்தித் தள்ள, வியப்போடு டாஸ்மாக் கடையை நெருங்கினான்.
பக்கத்து வீட்டு பெருமாள் மாமா கடை வாசலில் நின்றுக் கொண்டிருக்க,
அவரைப் பார்த்து சிநேகமாய் சிரித்தான். டாஸ்மாக் கடை வாசலில்
இளங்கோவைப் பார்த்ததும், பெருமாள் மாமா, விழிகளில் வியப்பைக் கூட்டி
புருவங்களை உயர்த்தி சிரித்தார்.
” என்னத் தம்பி இங்கே வந்திருக்கீங்க?”
” டாஸ்மாக் கடையிலே ஒரே கூட்டமா இருக்கே. இன்னிக்கு நம்மூர்ல
என்ன விசேசம்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன் மாமா”
” அதானே பார்த்தேன். தம்பிக்கு இந்த பழக்கமெல்லாம் இல்லையே. ஆனா…
இங்கே வந்து நிக்குதேன்னு ஒரு நிமிசம் ஆடி போயிட்டேன்”
” சரி. நான் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க. நம்மூரு
ஆம்பளைங்க பூரா டாஸ்மாக்ல கவுந்து கிடக்குதுங்களே. ஊர்ல இன்னிக்கு என்ன
விசேசம்?”
” உனக்கு விசயமே தெரியாதா தம்பி”
” ஒரு வேலை விசயமா சென்னைக்கு போன வாரம் போனேன்.
இன்னைக்குத் தான் திரும்பி வர்றேன் மாமா”
” ஓ…! நம்ம தொகுதிக்கு இடைத் தேர்தல் வருதுல்ல”
” ஆமா மாமா”
” சுயேட்சையா நிற்கற கண்ணையன், ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம் ரூபா
கொடுத்தாருப்பா”
” என்னது…! அஞ்சாயிரமா? என்ன மாமா இப்படி சொல்றீங்க” இளங்கோ
கண்களை அகலமாய் விரித்து கேட்டான்.
” எப்படியாவது எலக்சன்ல ஜெயிச்சே ஆகனும்ங்கற வெறி
கண்ணையனுக்கு. அதுக்காக பணத்தை தண்ணியா செலவழிக்கிறான் தம்பி”
” அதுக்குன்னு ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம்ங்கறது ரொம்ப ஓவரால
இருக்கு மாமா”
“கண்ணையனோட பாட்டன், முப்பாட்டன் சேர்த்து வச்ச சொத்து. ஏழு
தலைமுறைக்கும் உட்கார்ந்தே திங்கலாம். அதனாலத்தான் கண்ணையனுக்கு
வலி எதுவும் தெரியலே. பணத்தை அள்ளி அள்ளி வீசறான்”
” என்னமோ போங்க. ஜனநாயகம் பணநாயகமா மாறி போச்சு. மக்களும்,
கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டுப்
போடறாங்களே” சொல்லிய இளங்கோ வேதனையாய் சிரித்தான்.
” நீயும் நானும் வேதனைப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லே. பொழுது
வேற போயிட்டு இருக்கு. இங்கேயே மசமசன்னு நிக்காம, வீட்டுக்கு போ தம்பி”,
பெருமாள் மாமா இளங்கோவை மெல்ல அப்புறப் படுத்த, அவன் வீட்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
வீட்டினை நெருங்க, நெருங்க இளங்கோ தன் முகத்தினை வெகுவாய்
சுளித்துக் கொண்டான். தெருவின் இரு புறமும் ஆண்கள் குடித்து விட்டு
உருண்டுக் கிடந்தனர். சிலர் வேட்டி அவிழ்ந்து ஜட்டியோடு மண்ணில் உருண்டு
கிடந்தனர்.
எதிர் வீட்டு கோபால் ” உவ்வே” என்று பெருத்த ஒலியினை எழுப்பியப்படி
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். நிறைய குடித்திருப்பான் போலும். சாராய
நெடி இளங்கோவின் மூக்கினையும் துளைக்க ஆரம்பித்தது. வீட்டுக்குள்ளிருந்து
வந்த கோபாலின் மனைவி கணவனை கெட்ட வார்த்தைகளால் திட்ட
ஆரம்பிக்க, காதையும் மூக்கையும் அவசரமாய் இரு கரங்களாலும் பொத்தி
கொண்ட இளங்கோ சடுதியில் வீட்டுக்குள் நுழைந்தான்.
வீடே மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. அப்பா கேசவன் கூடத்தில்
கிடந்த நாற்காலியில் அமர்ந்து தினத்தந்தியில் மூழ்கியிருந்தார். அம்மா
மீனாட்சி கூடத்து சுவற்றோரம் மோட்டு வளையை வெறித்தப்படி
அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் அழுததற்கான அடையாளம் அவள் முகத்தில்
அப்பட்டமாகவே தெரிந்தது.
எதுவும் பேசாத இளங்கோ கொல்லைப்புறம் சென்றான். அவனது
தங்கைகள் நால்வரும், ஆளுக்கொரு கதைப் புத்தகத்தில் மூழ்கியிருந்தனர்.
இளங்கோவின் நடை சத்தத்தை கேட்டு மூத்த தங்கை கோமதி தலை உயர்த்தி
பார்த்தாள்.
” எப்பண்ணே வந்தே”, ஆவலாய் கேட்டாள்.
” இப்போதாம்ப்பா வந்தேன். என்ன வீடே ஒரே அமைதியாய் இருக்கு?”
” அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகாபாரத போர்”, சொல்லிவிட்டு கோமதி
களுக்கென நகைத்தாள்.
” வின்னர் யாருப்பா?”
” வழக்கம் போல அப்பாதான்”
“ஓ…தோத்து போனதுலதான் இராஜமாதா மூக்கை சிந்திகிட்டு உட்கார்ந்து
இருக்குதா?”
” ஆமாண்ணே”
” மேட்டர் என்னவாம்?”
” எலக்சன் வருதுல்ல. ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம். பாட்டியையும் சேர்த்து
நம்ம வீட்டுக்கு மொத்தம் எட்டு ஓட்டு. சொளையா நாற்பதாயிரம். கட்சிக்காரங்க
வந்தாங்க. அப்பா பணத்தை வாங்கலை. அம்மாவுக்கு ஏகப்பட்ட கடுப்பு.
அப்பாவை வாங்கு வாங்குன்னு வாங்கிடுச்சு”
” ஹா…ஹா…ஹா…! அப்புறம்?”
” அப்பாவும் பதிலுக்கு கத்த, ஏக ரகளையா போச்சுண்ணே”
” சரி…சரி…அவங்க சண்டையிலே நாம தலையிட வேண்டாம். சோறு கீறு,
மிச்சம் மீதி இருக்கா தாயி?”
” இருக்குண்ணே”
” எனக்கு வயித்தை பசிக்குது. நீ போய் சோத்தை போடு. நான் கை கால்
அலம்பிட்டு வந்துடறேன்”, இளங்கோ சொல்லிக் கொண்டே கொடியில்
தொங்கிக் கொண்டிருந்த துண்டினை உதறி தோளில் போட்டுக் கொண்டு,
கிணற்றடி நோக்கிச் சென்றான்.
******
சாப்பிட்டு முடித்த இளங்கோ மொட்டைமாடியில் படுத்திருந்தான்.
வானத்தில் பௌர்ணமி நிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது. முழு நிலவின்
மஞ்சள் ஒளியில் மொட்டை மாடி முழுவதுமே பட்ட பகலாய் மாறியிருந்தது.
அப்பா சுந்தரத்தை நினைத்து அவனுக்கு மிகவும் பெருமையாகவே
இருந்தது. தேர்தல் என்றாலே இந்த ஊர் சனங்களின் அகத்திலும், புறத்திலும்
மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டுக் கொண்டிருக்கும். தேர்தலில் நிற்கும்
வேட்பாளர்களிடம் அடித்து, பிடித்து பணம் வாங்கிக் கொள்வார்கள். தங்களின்
விலைமதிப்பற்ற அடிப்படை உரிமையினை, பணத்திற்காக வேட்பாளர்களிடம்
விற்பதை பற்றி, யாருக்கும் எந்தவொரு குற்றவுணர்வும் இதுவரை
ஏற்பட்டதேயில்லை.
ஆனால் அவன் தந்தை சுந்தரம் மட்டும் விதிவிலக்கு. இதுவரை ஒரு
பைசாக்கூட, எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் கைநீட்டி அவர் பெற்றதில்லை.
கட்சிக்காரர்கள் வீடு தேடி வருவார்கள். சுந்தரத்திடம் வலுகட்டாயமாக பணத்தை
திணிப்பார்கள்.
” எலேய் நாதாரி பயலுங்களா…? என்னைப் பத்தி என்னதான்டா உங்க
மனசுல நினைச்சியிருக்கீங்க…? உங்க பிச்சை காச வாங்கிட்டு ஓட்டு
போடறதுக்கு பதிலா, நரகலை வாயில வச்சிகிட்டு, ஒரு சாண் கயித்தை
கழுத்துல மாட்டிகிட்டு, உத்தரத்துல தொங்கிடலாம்டா. பரதேசி நாய்களா…!
த்தூதூ”, காறி உமிழ்ந்தபடியே அடிவயிற்றிலிருந்து ஆங்காரமாய் சுந்தரம்
கர்ஜிக்கும் போது, கட்சிக்காரர்கள் மிரண்டுப் போவார்கள். துண்டைக் காணோம்,
துணியைக் காணோமென தெரித்து ஓடுவார்கள்.
சுந்தரத்தை பொறுத்தவரை, தன் அடிப்படை உரிமையினை காசு வாங்கிக்
கொண்டு விற்பதை, மிகுந்த அவமானமாகவே கருதினார். இப்படிப் பட்ட
உயரிய சிந்தனைகளை உடையவருக்கு, தான் மகனாக பிறந்ததை நினைத்து
இளங்கோ ஏகத்துக்கும் பூரித்துதான் போவான். சுந்தரத்தின் மகன் நான்
என்பதை சொல்லிக் கொள்வதில், அளவிட முடியாத ஆனந்தம் அவனுக்கு
ஏற்படும்.
புரண்டு படுத்த இளங்கோ கொட்டாவி ஒன்றினை மிக நீளமாய்
உதிர்த்தான். நெடுந்தூர பயண களைப்பினால் அவனது விழிகள் தூக்கத்திற்கு
கெஞ்ச, இளங்கோ தன் இமைகளை மெல்ல மூட ஆரம்பித்தான்.
திடீரென அம்மா மீனாட்சியின் குரல் ஆங்காரமாய் செவிப்பறையை
தாக்க, இளங்கோ திடுக்கிட்டு கண் விழித்தான். விடிந்திருந்தது. கதிரவனின்
செங்கதிர்களால் அடிவானம் சிவந்திருந்தது. அம்மாவின் ஓலத்தால்
பதற்றமானவன், மாடிப்படிகளில் தடதடவென்று அவசரமாய் இறங்கி கீழே
ஓடினான்.
” ஏம்மா….காலங்காத்தாலே இப்படி கூப்பாடு போடறே? என்ன விசயம்…?”,
பதற்றமாய் அம்மாவிடம் வினவினான்.
” டேய்…சின்னவ கீதாவுக்கு காலேஜ் பீஸ் இன்னும் கட்டலை. ரெண்டு
மாசமா வீட்டு வாடகை கொடுக்கலே. இந்த மாசம் கரண்டு பில்லு இன்னும்
கட்டலை. மளிகை கடை பாக்கி வேற இருக்கு. நேத்தே…மளிகை கடை
செட்டியாரு வீட்டுக்கு வந்து கத்திட்டு போயிட்டாரு”. ஆங்காரமாய் அரற்றிய
மீனாட்சி மூக்கை சிந்தி சுவற்றில் தேய்த்தாள்.
” சரிம்மா. இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே. இதுக்கு ஏன் கத்தி ஊரை
கூட்டறே?”
” உன் அப்பனுக்கு பொழைக்க தெரியலைடா. ஓட்டுப் போட ஊரே காசு
வாங்கிடுச்சு. நம்ம வூடு மட்டும் தான் பாக்கி. இந்த மனுசன் என்னடான்னா…,
மனசாட்சி, மண்ணாங்கட்டின்னு வக்கனையா வசனம் பேசிக்கிட்டு திரியுறாரு”,
விசனமாய் பேசிய மீனாட்சி புடவை தலைப்பால் தன் விழிகளில் வழிந்த
கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
” அம்மா…! அப்பாவோட குணம் தான் உனக்குத் தெரியுமே. அப்புறம்
எதுக்கு தேவையேயில்லாம கூப்பாடு போடறே…?”
” நாற்பதாயிரம்டா. நம்ம வீட்டுக்கு எட்டு ஓட்டு. சொளையா
நாற்பதாயிரம். இந்தக் காலத்திலே நாற்பதாயிரத்தை, சும்மா யாரு நமக்கு தரப்
போறாங்க…? இந்த நாற்பதாயிரம் ரூபா இருந்தா, எத்தனையோ பிரச்சனைகளை
நான் தீர்த்துட முடியும்…”, மீனாட்சி நீட்டி முழங்கி சொல்லிக் கொண்டிருக்க,
இளங்கோ தன் பார்வையினை அப்பாவை நோக்கி வீசினான்.
மனைவி மீனாட்சியின் கூப்பாடுகளுக்கெல்லாம் சுந்தரம் செவி
சாய்ப்பதாகவே தெரியவில்லை. உள்ளறையில் போடப்பட்டிருந்த இரும்பு
கட்டிலில் அவர் கண் மூடி ஆழ்ந்த சயனத்திலிருந்தார்.
அம்மாவின் நிலைமையை பார்க்கையில் இளங்கோவிற்கு பரிதாபமாகத்
தான் இருந்தது. வக்கீல் குமாஸ்தாவான அப்பா சுந்தரத்தின் சொற்ப வருவாயில்,
கட்டுசெட்டாக குடும்பம் நடத்தி, தன்னுடைய ஐந்து குழந்தைகளுக்கும் சோறு
போட்டு, மிகவும் சாமார்த்தியமாக பட்ட படிப்பு வரையில் அனைவரையும்
படிக்க வைத்த அம்மாவை நினைத்து மிகவும் பெருமைப்பட்டான்.
ஆனால் அம்மாவை விட, அப்பா சுந்தரம் ஒரு படி உயர்வாகவே அவன்
கண்களுக்கு தெரிந்தார். வறுமையிலும் நேர்மையுடன், தன் மனசாட்சிக்கு பயந்து
அவர் வாழ்ந்து வருவதை நினைத்து இளங்கோவிற்கு தன் தந்தையின் மீது அதீத
பாசம் பொங்கிக் கொண்டிருந்தது.
தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மீனாட்சி அழுதழுது ஒரு
கட்டத்தில் ஓய்ந்து போனாள். சுயேட்சை வேட்பாளர் கண்ணையனும் தூது மேல்
தூது விட்டு ஓய்ந்துப் போனார். எட்டு ஓட்டாச்சே…!
பக்கத்து ஊரில் நடைபெற்ற தன் நண்பனின் திருமணத்தில் கலந்துக்
கொண்டு இளங்கோ வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தான். அவனின் மனதில்
மெல்லிய சோகம் சூழ்ந்திருந்தது. வருகின்ற ஐப்பசி மாதத்தோடு அவனுக்கு
முப்பது வயது முடியப் போகின்றது. அவனுடன் படித்த அனைவருக்கும்
திருமணமாகி, குடும்பம் குழந்தையென வாழ்ந்து வருகின்றார்கள்.
சரியான வேலையும், வசதி வாய்ப்புகளும் அற்ற தனக்கு, திருமணம் ஒரு
எட்டாகனியென அவனுக்கு திட்டவட்டமாகவே புரிந்தது. போதாக்குறைக்கு
தனக்கு கீழ் நான்கு தங்கைகள். அனைவரையும் கரை சேர்ப்பத ற்குள், தனக்கு
திருமண வயதே தாண்டிவிடும், என நினைக்கும் போதே அவனுக்கு மிகுந்த
அயர்ச்சி ஏற்பட்டது. நீண்ட ஏக்க பெரு மூச்சு ஒன்றினை இழுத்து விட்டவன்,
தன் வீட்டினை அடைந்தான்.
வாசற்படியை மிதிக்கும் போதே பிரியாணி வாசனை அவனது மூக்கினை
துளைத்தது. ” என்னது…? நம்ம வீட்டுல பிரியாணியா…? வாய்ப்பில்லையே…”,
என்று நினைத்தப்படி வீட்டுக்குள் நுழையும் போது, அவனது இரண்டாவது
தங்கை சுமதி கொல்லைப்புறத்திலிருந்து அவசரமாய் எதிர்பட்டாள்.
” என்ன சுமதி…? நம்ம வீட்டுல பிரியாணி வாசம். இது வரைக்கும், இந்த
வாசமெல்லாம் நம்ம வீட்டுல வந்ததில்லையே…? இன்னிக்கு புதுசால்ல இருக்கு.
எப்படிப்பா?” , ஆர்வமாய் தங்கையிடம் வினவ, சுமதி நமட்டு சிரிப்பொன்றை
உதிர்த்தாள்.
” ஆமாண்ணே…! நம்ம வீட்டுக்கும் நாற்பதாயிரம் பணம் வந்திடுச்சு. எட்டு
ஓட்டுல்ல…”, சுமதி சொல்லச் சொல்ல இளங்கோ நெஞ்சுக் குழிக்குள்
ஏகத்துக்கும் அதிர்ந்துப் போனான். அவனால் தன் காதுகளையே நம்ம
இயலவில்லை.
” அம்மா எங்கே சுமதி…?”
” அம்மா…கொல்லைப்புறம் மீன் கழுவுது. நான் போய் அம்மாவுக்கு கூட
மாட ஒத்தாசை செய்யறேன். உனக்கு பசிக்குதுன்னா, அடுப்படி மேடையிலே
பிரியாணி இருக்கு. போய் சாப்பிடு…”, சுமதி குதூகலமாய் சிரித்தப்படி
கொல்லைப்புறம் ஓடினாள்.
இளங்கோவின் கண்கள் அப்பாவை தேடின. வீட்டின் உள்ளறையில்
கட்டிலில் படுத்திருந்த சுந்தரம் மகனைக் கண்டதும் அவசரமாய்
எழுந்தமர்ந்தார். அவரை அதிர்ச்சியாய் நோக்கிய இளங்கோவின் வாயிலிருந்து
வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை. பல்வேறு உணர்ச்சிகள் முகத்தில்
பிரதிபலிக்க, அப்பாவை வெறுப்புடன் வெறித்து பார்க்கலானான்.
” டேய்…டேய்…இளங்கோ. இப்படியெல்லாம் என்னைப் பார்க்காதேடா. நான்
ரொம்ப நல்லவன்டா. நாற்பதாயிரத்துக்கு ஆசைப்பட்டு மோசம் போயிட்டேன்
டா. என்ன செய்யறது…? நமக்கும் செலவு இருக்குல்ல”, சுந்தரம் தழுதழுப்பான
குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இளங்கோ விருட்டென மொட்டை
மாடிக்கு விரைந்தான். மிகுந்த ஆங்காரத்துடன் பாயை உதறி, அவசரமாய் அதில்
படுத்து கொண்டு ஆகாயத்தை வெறிக்க பார்த்தான். நெஞ்சுக்குள் என்னவோ
செய்தது. அவனின் அடி வயிறு பகபகவென எரிந்தது.
” ஐயோ…என் அப்பாவா இப்படி செய்துள்ளார்”, அவனால் நம்பவே
முடியவில்லை. அப்பா சுந்தரத்தின் நேர்மை, மனசாட்சி,
மண்ணாங்கட்டியெல்லாம் பணத்தின் மதிப்பின் முன் தோற்று போனதை
நினைத்து, நினைத்து வியந்துப் போனான். வயிறு பசித்தது. ஆனால் சாப்பிட
மனம் ஒப்பவில்லை அவனுக்கு. பசித்த வயிற்றுடனும், நெஞ்சாங் கூட்டினில்
சுமந்த ஏமாற்றங்களுடனும் நெடு நேரம் புரண்டவன் அப்படியே உறங்கிப்
போனான்.
” ஐயையோ… ! மோசம் போயிட்டேனே. யாராச்சும் ஓடி வாங்களேன்…”,
நடு இரவில் மீனாட்சியின் குரல் தீனமாய் ஒலிக்க ஊரே விழித்துக் கொண்டது.
அம்மாவின் குரல் கேட்டு இளங்கோவும் வாரி சுருட்டி எழுந்தான். பதறியப் படி
கீழே ஓடினான்.
நட்ட நடு ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த மின் விசிறியில், அப்பா
சுந்தரம் ஒரு முழ கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது நாக்கு
வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவரது வாயை சுற்றிலும் மஞ்சளாய்
எதுவோ ஒட்டிக் கொண்டிருந்தது. இளங்கோ சுந்தரத்தின் உடல் அருகே சென்று
உற்று கவனித்தான். நரகல் வாடை கப்பென அடித்தது. இளங்கோவிற்கு புரிந்துப்
போனது. அப்பா சுந்தரத்தின் மனசாட்சி வென்று விட்டதை நினைத்து,
மின்விசிறியில் சடலமாய் தொங்கிக் கொண்டிருந்தவரை தீர்க்கமாய் வெறிக்க
ஆரம்பித்தான்.
**************************************