கைகளைப்பிடித்து தரதரவென்று வேகமாக இழுத்து கொண்டு புவனாவை பைக்கில் ஏற்றி அவளை அம்மா வீட்டில் விட்டான். புவனா செய்வதறியாமல் திகைக்கிறாள்
வயிற்றில் ஐந்து மாதம் வேறு.
அவன் உனக்கு சரியானவனாக தெரியவில்லை. அங்கே போனால் கஷ்டபடுவாய்.
ஒருநாள் கண்கலங்கிகொண்டு இங்கேதான் வருவாய். இப்போது சொன்னால் உனக்கு புரியாது.
அம்மா சொன்னது போலவே நடந்து விட்டது. மல்லாந்து படுத்து உமிழும் மனநிலையில்..
எதேச்சையாக வீட்டு வாசலில் நின்ற புவனாவின் அம்மா
மாப்பிள்ளையின் புது அவதாரம் கண்டு பயந்தே போய்விட்டாள்.
கொஞ்சம் சுதாரித்து,
வாங்க மாப்பிள்ளை வீட்டுக்கு வாங்க என்ன ஆச்சு என்ன ஆச்சு என பதறியபடி கேட்டாள்
என்னாங்க பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க. எல்லாம் சொல்லி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைங்க. வேறு எதுவும் பேசாமல் வேகமாக வீட்டை விட்டு புறப்பட்டான்.
கோபமும் ஆத்திரமும் அவன் கண்களை மறைத்தது.
வாப்பா வாப்பா ரமேஷ் என்னடா மருமகள்
வரலையா?
எதுவும் சொல்லாமல் உள்ளே கோபமாக போனான்.
பின்னாடியே அப்பா ரமேஷின் கோபம் அறிந்தும் கேட்டார் ஏண்டா என்னாச்சுடா?
புவனாவை அழைச்சிட்டு வர வேண்டியதுதானே. ஏதாவது எக்ஸாம் இருக்கா எங்கேயாவது டூர் போயிருக்கா?
என்னான்னு சொல்லுடா சொன்னாதானே தெரியும்.
சொல்லுடா..
எதையும் சொல்லாமல் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
கதவை சாத்திய ரமேஷ் கட்டிலில் அப்படியே மல்லாந்து படுத்தான். எல்லாம் சூனியமாக தெரிந்தது அப்பா சொன்னது போலவே நடந்துவிட்டது. இனி அம்மாவை நான் எப்படிப் பார்ப்பேன். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அம்மா கேட்கிற கேள்விக்கு எப்படி பதில் சொல்ல போறேன். அப்பொழுதே நிறைய தடவை சொன்னாங்க
காதல் வேற கல்யாணம் வேற.
யார் தாண்டா இந்த உலகத்துல காதலிக்கல காதலிச்ச எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா ? இல்லையே. காதலிச்ச வரைக்கும் போதும் உனக்கு புடிச்ச மாதிரி அழகான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
அம்மா பேச்சை கேளுப்பா இப்படி
எத்தனையோ தடவை அம்மா சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும் அம்மாவின் பேச்சை கேட்காமல் இப்படி ஒரு முடிவெடுத்து விட்டேன் எதுவுமே சரியாக நடக்கவில்லை.
மிகவும் விரக்தி நிலையில் இருந்தான் தூக்கம் ஒரு வாரமாக அவனுக்கு இல்லை எதையோ சிந்தித்தவாறே அப்படியே உறங்கிப் போனான்.
நான்கு வருடமாக காதலித்தான் புவனாவை
பெண்கள் கூட்டத்தில் அவள் மட்டும் தனியே எளிமையாக சுடிதாரோ புடவையோ எதுவாக இருப்பினும்
நாகரீகமாக நளினமாக உடுத்தி நடப்பதை கண்டு ஒருவித பேராவல் அவள்மீது உண்டானது.
அவளை காண காரணம் தேடினான்.
அவளுக்காக தேடித்தேடி பொருட்களை வாங்கி பரிசளித்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து ரமேஷ் எழுந்து அம்மாவை தேடினான்.
வீட்டில் அம்மா இல்லை என்றவுடன் ஏதோ ஒன்று குறைவது போல் உணர்ந்தான் வந்தவுடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்தான்.
ரமேஷின் ஆத்திரம் கோபம் உணர்ந்தவராய் ரமேஷை அப்பா கூப்பிட்டார். நடந்தது சொல் என்னப்பா?
ஏதாவது ஒன்னு சொன்னா அதுக்கு பதில் பேசுறா. என்னால திருப்பி பேச முடியல அவள் சொல்ற காரணத்தை
என்னால ஏத்துக்க முடியல. என்னை விடுங்கப்பா பக்கத்து வீட்டுக்காரங்க
பார்க்கிறவங்க என்னப்பா சொல்லுவாங்க.
சரிடா விடுடா இப்ப கடைசியா என்ன நடந்துச்சு. வீட்ல போய் விடுற அளவுக்கு என்ன நடந்துச்சு சொல்லு.
அப்பா, பொழுதானா தூங்குறா,
வேலை போய்டுவந்த களைப்பு என்கிறாள். மூன்று, நான்கு நாட்கள் தலைகுளிக்கும்படி வந்தால் தலைவலி அல்லது ஜலதோஷம் வரும் என்கிறாள்.
சாயங்காலம் வாசல்ல கோலம்
போடுவது கிடையாது. நான் கேட்டால் காலையில் தான் போட்டேன்ல என்கிறாள்.
சரி அப்புறம் என்ன நடந்துச்சு.
பாத்ரூம்ல தாலியை கழட்டி வச்சிருக்காப்பா. பயங்கரமா கோவம் வந்துட்டு இவள் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைனு அவங்க வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்.
அப்ப சரி நீ விட்டது. சரி தூங்கு நாளைக்கு பேசிக்கலாம் அம்மா வரட்டும்.
அவளை எப்படி உருகி உருகி காதலித்தேன் குடும்பப் பெண் போல் அமைதியாக அடக்கமாக இருந்தாளே என்னவாயிற்று அவளுக்கு.
பேச பயந்தவளை நான் தானே பேச சொல்லி வற்புறுத்தினேன். தைரியமாக பேசு என்று.
இப்பொழுது என்னையே எதிர்த்து பேசும் அளவுக்கு வந்துவிட்டாள்.
நினைத்து பார்க்க இன்னும் ஆத்திரம் வந்தது.
நான்கு வருடமாக
என்னையே சுற்றி வந்தவன்
நான் எது செய்தாலும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவான். அமைதியாக இருந்தாலும் ஏதாவது பேசு ஏதாவது பேசு என்று என்னை பேச வைத்தவனே ரமேஷ் தானே. நான் எது பேசினாலும் சரி என்று சொல்லுவான். சரியாகத்தான் பேசுகிறாய் என்று சொல்லுவான். தைரியமாக பேசு என்பான்.
திருமணத்திற்குப் பிறகு என்னவாயிற்று அவனுக்கு நல்ல தோழனாக இருந்தான் உற்ற துணையாக இருந்தான். திருமணத்திற்குப் பின்பு என்னவாயிற்று. கணவன் என்றால் என்ன? கூடுதல் பொறுப்பும் அக்கறையும், பாதுகாப்பு உணர்வு தானே
கூடுதல் அதிகாரம் மட்டுமே அவனிடம் இருந்ததாக உணர்ந்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
புவனாவை பஸ்ஸில் ஒருத்தன் புவனா புவனா என்று அவள் பெயரை சொல்லி அழைத்தான். ரமேஷ் உடனே புவனாவிடம் போய் என்னவென்று கேளென உரிமையாக சொன்னான்.
புவனாவோ வேண்டாம் விட்டு விடுங்கள் ஏன் வீண் வம்பு என்று சொன்னாள்.
நீ கேளு நான் பின்னாடியே அவனை பாத்துக்குறேன் ஒரு சகோதரனாய் நண்பனாய் இருந்து அவளின்
பாதுகாப்பை உறுதி செய்ததே புவனாவிற்கு ரமேஷ் மீது காதல் கொள்ள வைத்தது தன்னுடைய தந்தையையும் சகோதரனையும் ரமேஷின் செய்கையில் நடவடிக்கைகள் பார்த்தாள்.
அடுத்த நாள் எழுந்தான்.
பல்லை விளக்கி கொண்டிருந்த
ரமேஷிடம்
வாடா ரமேஷ்
பாத்ரூமை எட்டி பார்த்துக் கொண்டே குளிக்கும்போது தாலியை கழட்டி வைத்தேன்டா எடுத்துக்கொடு.
ஒன்னும் தெரியாது உங்க அப்பாவுக்கு எதையும் யோசிக்க மாட்டார். ஹேர் டை போட்டேன். அதோடு குளித்தால் செயின் ‘டை’பட்டு கருத்துப் போயிடும். அதுக்குத்தான் கழட்டிவெச்சுட்டு குளிப்பேன்.
ஒரு தடவை அப்படித்தான்டா மறந்து வைத்து விட்டு போயிட்டேன். அதைப் பார்த்துட்டு கோபப்பட்டு
சண்டை போட்டுக்கிட்டு
ஒரு மாசமா பேசவே இல்ல.
அவருக்கு வயசாயிட்டா.. இல்லன்னா என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி இருப்பார். வேற வழியில்லாம பேசினார்
எல்லாம் தெரிஞ்ச மாதிரி வெளியில பேசிப்பாரு.
என்னை யோசிக்க மாட்டியானு கேப்பாரு
நம்ம ஏதாவது யோசிச்சு அறிவு பூர்வமா செஞ்சா திமிரானு கேட்பார்.
நீ பிறக்கும் போது ஆபரேஷன் தியேட்டரல தாலியை கழட்டி அவரிடம்தான் குடுத்தேன். நகையெல்லாம் கழட்ட சொன்னாங்க.
எக்ஸ்ரே எடுக்கும்போதும் அப்படிதான்.
அப்ப மட்டும் ஒண்ணுமில்லையானு கேட்டேன்.
என்னத்த படிச்சு, என்ன வேலை செஞ்சி, என்னடா பிரயோஜனம்.
என்னவோ போடா உன் ஆராய்ந்து அறியும் அறிவு அவருக்கு வராதுடா..