“ஏ! இங்க பார்றா ஏதோ மினுக்கு மினுக்கு இருக்கு” என்று திடீரென நின்று போன அரவை இயந்திரத்தை கழற்றி அதன் பற்களின் நடுவே கண்களை உலாவவிட்ட மீசையின் கூச்சல். மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ரங்கனை திடுக்கிட்டு நிற்க வைத்தது. கிறீச்க்… என்ற சிறு சத்தம் மற்ற இரு இயந்திரங்களின் பேரிரைச்சலை நிறுத்தியது.
அரிசி மாவில் குளித்தது போல உடலெங்கும் மாவு பூசி வேஷங்கட்டிருந்த ரங்கன். ஊலையின் மேல் படித்திருந்த கோதுமை மாவு துகளை விலக்கிவிட்டு இருவரும் அந்த பற்களின் நடுவே சிக்கி இருந்த நாடா போன்ற ஒன்றை நெடுநேரம் எடுக்க போராட்டம். வேலை போட்டது போட்டபடியே … மிளகாய்த்தூள் நெடி இல்லாததால் ஹச்.. ஹச் என்று தும்மல் இல்லை.
அது வேறொன்றுமில்லை அஞ்சு பவுன் தங்க சங்கிலி. ‘டேய் தாலி சரடு மாதிரி இருக்குடா’ என்று ரங்கன் மீசையிடம் காதோரமாய் சொன்னது தெருவின் மௌனத்தின் காரணமாய் வெளியே கசிந்தது ஒரே முணுமுணுப்பு.
கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் போன்ற முக்கூட்டு தெரு மழைக்காலங்களில் பால் குளங்களாக மாறிவிடும் அந்த தெருவின் பெயர் பலகை அழிந்து ரொம்ப நாள் ஆகிறது. அதனால் புதிதாக வரும் தபால்காரர்களுக்கும் பொருளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் நவீன யுகப் பணியாளர்களுக்கும் இது பெரும் குழப்பம் அந்தத் தெருவுக்கு அடையாளமாக இருப்பது ஒன்று அந்த மாவு மில் மற்றொன்று தாட்சாயணி( தாக்ஷ்). தாக்ஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். அவள் வீடு இருக்கும் தெருவிற்கு வலப்புறமாக மேயர் பாசுதேவ் தெருவும் இடப்புறமாக பவளக்கார தெருவும் உள்ளது. தாட்சாயிணி தெரு பெயரோ நினைவில்லை நினைவுக்கு வரும்போது சொல்கிறேன்.
நிசப்தமாக இருக்கும் தெருவிற்கு உயிரோட்டம் தருபவள் தாக்ஷ். குறிப்பாக அவளின் ஷீல்ஸ் செருப்பு. லாடங்கட்டிய காளை போல் டக் டக் என்ற நடை வசீகரிக்க கூடியது.
அவள் வேலைக்கு சென்ற பின்னால் அந்த பணியை இடைவிடாமல் செய்பவர்கள் தான் இந்த மீசையும் ரங்கனும் வயதான கிழடுகள் இருவரும். இருவரில் யார் மூத்தவர்கள் என்பது யாருக்கும் தெரியாது. வாடா போடா என்று இருவரும் மாறி மாறி பேசிக் கொள்வது அவர்களின் நட்பின் ஆழத்தை பிரதிபலிக்கும் மீசை நினைப்பதை ரங்கன் செய்வார். கிட்டத்தட்ட மார்க்சும் ஏங்கெல்ஸும் மாதிரி ஆனால் மீசை கொஞ்சம் கோபக்காரர் பெயர் மாரிமுத்து மீசையின் மூலமே அடையாளப்படுத்தப்படுகிறார். இது அந்த நகரின் நெடுநாள் வழக்கம் பீடியை பற்ற வைத்து கொண்டு வரும் கிராக்கிகளை கவனித்துக் கொண்டிருப்பார். ரங்கனோ அடுத்து நடக்க இருப்பது என்ன என்பது பற்றிய யோசனை இருப்பவர். இருவருக்கும் ஏழாம் பொருத்தம் மாதிரி தோன்றினாலும் ஏதோ ஒன்று இருக்கிறது இவர்களின் பிணைப்புக்கு என்பது மட்டும் புரியும் பார்ப்பவர்களுக்கும் அந்த நகர் வாசிகளுக்கும்.
அந்த நகரின் மூத்த குடிமக்கள் மீசை, ரங்கன் மற்றும் தாக்ஷ்.தாக்ஷ் எட்டாம் வகுப்பு முடித்த கையோடு குடும்பத்துடன் குடி வந்தார்கள்.
பன்னிரண்டு வயது அப்போது அவளுக்கு இப்போது முப்பத்தேழு வயதாகிறது. காதோரங்களில் ஒன்றிரண்டு நரைமுடி எட்டிப் பார்க்கிறது அதை மறைக்கவும் சுருக்கங்களையை ஒளிக்கவும் போராடி வருகிறாள் அதற்கான முயற்சி ஓய்ந்த பாடில்லை .
“பட் ஷீ டில் வெர்ஜின்” (முதிர்கண்ணி). திருமணம் செய்து கொள்ளாமல் வாழ வேண்டும் என்பது அவளின் குறிக்கோள் அல்ல. தாக்ஷ்யின் பெற்றோரும் அதை விரும்பவில்லை அவர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர் அவள் யூ ஜி முடித்த உடனே வரன் தேடும் முயற்சியும் ஈடுபடத் தொடங்கினார்கள். முதல் முயற்சி கைகூடவில்லை சரி திருமணம் ஆகும் வரை படிக்கிறேன் என்று வாய்ப்பு கேட்டு பீ ஜி படித்து முடித்தாள் இப்படியே தாக்ஷ் வாய்ப்புகள் கேட்டு கேட்டு வேலைக்கு சென்று வருகிறாள் திருமணம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
அடிக்கடி தாக்ஷ்க்கு தோன்றும் திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்வு முழுமை பெறுமா? பிள்ளை பெற்றால் தான் பெண்ணா? என்ற கேள்விகள் வால்மீன்கள் போல் சற்றென்று தோன்றி மறையும். மௌனமாக தியானத்தில் ஆழ்ந்து கிடக்கும் துறவி போல் சாலை நடந்து வரும் பொழுதெல்லாம் அந்த தியானத்தை கலைப்பது மீசை மற்றும் ரங்கனின் மாவு மில்லின் பேரிரைச்சல். விசுவாமித்திரர் தவம் கலைத்த மேனகை மாதிரி.
அந்த மாவு மில்லும் ஒன்றும் விஸ்தாரமான கடையெல்லாம் கிடையாது நகர் உருவானபோது ஏதோ யாரும் நிலத்தை அபகரித்து விடக்கூடாது என்பதற்காக போடப்பட்ட கொட்டாய் பின்பு பட்டா கொடுத்து விட்டதால் கல்லு வைத்து கட்டி மேலே ஓடு போடப்பட்டுள்ளது. அதுவும் இன்றோ நேற்று போட்டதில்லை பெருமழைக்கு தாங்காது உலுத்து போய் கொட்டும் . கடையின் அளவுக்கு இத்தனைக்கும் இத்தனை என்ற கணக்கு வரையறை கிடையாது. காரணம் ஒரு இடத்தில் அகலமாகவும் ஓர் இடத்தில் குறுகலாகவும் மலைக் குகை போன்ற அறை. அந்த அறையின் வடிவத்தை எதற்குள் வைத்து கூறுவது யாருக்கும் தெரியாது. கணக்கு வாத்தியார் ஒருமுறை கடைக்கு வந்த பொழுது இந்த கடையின் வடிவத்தை நாற்கரம் என்று சுட்டிப் போனார். மும்மூர்த்திகள் போல் அந்த கடையில் மூன்று அரவை இயந்திரங்கள். அதில் ஒன்று மிளகாய் தூளுக்கென்றே ஒதுக்கப்பட்டது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு சமம்3:1 . மற்ற இரண்டில் அரிசி கோதுமை மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளைக்கார துரைகளாய் மாறி போய் இருக்கும் .
ஆயுத பூஜை அன்று இட்ட பட்டை அடுத்த ஆண்டு வரை அப்படியே இருக்கும். இவற்றின் கூச்சல் அதிகரிக்கும் போது அமைதி படுத்த ஆயில் கேன். அதிகமாக விட்டும் பார்த்ததில்லை . போலியோ சொட்டு மருந்து போல இரண்டு சொட்டு அதுவே போதுமானதாக இருக்கும் என்பது மீசையின் கணிப்பு. மீசையும் ரங்கன் இடைவிடாது உழைப்பவர்கள். தாக்ஷ் இந்தக் கடையை கடந்து செல்லும் போதெல்லாம் இரண்டு கிழடுகளையும் பார்த்து புன்னகைத்து செல்வாள்.
ஆனால் ஒரு நாளும் அதற்கு பதில் கிடைத்ததில்லை மிளகாய் நெடியில் பழகிப்போன மீசைக்கு இது புதிதாக இருந்தது ரங்கன் பதில் புன்னகை செய்ய தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்து ஓரிரண்டு முறை பழகிக் கொள்வதற்குள் தாக்ஷ் கடந்து சென்று விடுவாள்.
தாக்ஷ்க்கு திருமணம் ஆகாததற்கு பல காரணங்கள் உள்ளது. ஜாதக பொருத்தம் இல்லை என்று நிறைய வரன்கள் தட்டி போய்விட்டன. வேலைக்கு போகும் முன்னர் இது போன்ற காரணங்கள். அவள் வேலைக்கு சென்றப் பின்னால் இரவு தாமதமாக வருவதும் ‘நைட் ஷிப்ட்’ போய் வருவது சும்மா இருப்பவர்களின் வாய்க்கு அசைபோட நல்ல தீனி. அவளின் நடத்தை அக்கம் பக்கத்தாரால் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. பெண்கள் வெளிவருவது வேலைக்கு செல்வது பெண்களுக்கே பிடிக்கவில்லை. சமீபத்தில் தான் அத்திப்பூ பூத்த மாதிரி வரன் ஒன்று வந்தது. மாப்பிள்ளைக்கு வயது நாற்பது எட்டி வெகு நாட்களாகிறது. அவர் புகைப்படத்தை என்றோ காண்பித்தார்கள் தாக்ஷ்க்கு.
அவளும் அதை பார்த்து பூரித்து போகவில்லை. இருப்பினும் அவள் திருமணம் ஆன பின்னும் வேலைக்கு செல்ல அனுமதித்தால் மனதின் ஓரமாய் அவர் மீது ஓர் நல்ல அபிப்பிராயம். இங்கு பிரச்சனை அவர் இல்லை, அவரின் தாயார் மணியம்மை தான்.பழைமைவாதி சரியான கறார் பேர்வழி. வரதட்சணை என்பது எல்லாம் பாவம் என்று வாய் கிழிய வியாக்கியானம் பேசுபவர். தாக்ஷ்யின் தாய் தந்தையிடம் எனக்கு எதும் வேண்டாம் , “உங்க பிள்ளைக்கு என்ன போடுறீங்க”என்ற கேள்வி கேட்காமல் கேட்டு நாற்பது பவுன் என்று கடைசியில் உறுதியானது. தாக்ஷ்க்கு இதில் துளியும் விருப்பமில்லை. பிற்போக்கான சிந்தனைக்கு ஒருபோதும் அவள் துணை நிற்பதுமில்லை. ஆனால் அவளின் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு கட்டுப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்னால் , அது மட்டுமல்ல அவளுக்கும் அவர் மீது முன்பு சொன்ன மாதிரி….
திருமணம் நெருங்க நெருங்க வேலை அதிகரித்தது. பத்திரிக்கை வைக்கும் பணியில் மூழ்கினர் தாக்ஷ்க்கின் பெற்றோர். அருகில் இருப்பவர்களுக்கு பத்திரிகை வைக்கும் சம்பிரதாயத்திற்கு இணங்க மீசையையும் ரங்கனையும் தேடி மாவு மில் விரைந்தாள் தாக்ஷ்யின் தாய்.
கடையை நெருங்க நெருங்க காச் மூச் என்ற கூச்சல். கிராக்கிகளால் இல்லை என்பது வெளியே யாரும் இல்லை என்பதை வைத்து புரிந்து கொண்டால்.
கடையை காலி செய்ய சொல்லி கடை உரிமையாளர் காட்டமாக பேசி கொண்டிருக்கிறார். அவருக்கு அவசரமாக இரண்டு இலட்சம் தேவை படுகிறது. அதற்காக இந்த கிழடுகளை கேட்டு தொல்லை செய்கிறார். அவருடைய ஒரே நிபந்தனை “வாடகை வேண்டாம் இரண்டு இலட்சம் கொடுத்து லீசுக்கு இருங்க” என்ற அவரின் ஓங்கு குரல் அந்த அரவை இயந்திரகளின் சத்தம் தாண்டி ஒலித்தது.
தாக்ஷ்யின் தாயார் அங்கிருந்து நகர்ந்து நகை கடைக்கு புறப்பட்டார். நகைகளை வாங்கிவிட்டு களைப்புடன் வீடு திரும்பியவுடன் வாசலில் காய வைத்திருந்த மிளகாய் தனியா அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம் போகும் பொழுதே தாக்ஷ்யிடம் சொல்லியும் செய்யாததால் கோபம். முணங்கி கொண்டே பையை கீழே வைத்து விட்டு மிளகாய் எடுத்து தூக்கில் போட்டு, நகைகளை பீரோவில் வைத்து விட்டு, தூக்கினை மீசை கடையில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து அக்கடா என்று கால்கள் நீட்டி படுத்து விட்டாள். வேலை முடித்து வீடு திரும்பிய தாக்ஷ்யிடம் வாங்கி வந்த நகைகளை ஆவலுடன் காண்பிக்க குழந்தை போல் துள்ளி குதித்தெழுந்தாள். அவளின் திருமணத்திற்குகூட இவ்வளவு மகிழ்ந்தது இல்லை. அவள் இப்பொழுது இன்பக்கடலில் மூழ்கி கிடக்கிறாள்.
எடுத்து காட்டிக் கொண்டிருந்த அவளுக்கு பகீரென்று இருந்தது.
காரணம் அஞ்சு பவுன் தங்க சங்கிலி காணவில்லை. கைகளை பிசைந்தாள் நெஞ்சினை நெருக்குவது போல் குபீரென்று வியர்த்தது. பதறிப்போனாள். ரொம்ப நாள் கழிச்சு பிள்ளைக்கு திருமணம் ஆக போகுது சந்தோஷம் பட்டேன், அது உனக்கு பொருக்காத கடவுளே! தாக்ஷ் தாயின் புலம்பல் எங்கும் எதிரொலித்தது. தாக்ஷ்யை நகை கடைக்கு போகச் சொல்லி விரட்டினாள். அங்கும் இல்லை. பின்பு ஞாபகம் படுத்தி தான் சென்ற இடங்களுக்கு தாக்ஷ்யும் அவளும் தெரு தெருவாக அலைந்தனர். “மாவு மில் போய் பாரு “என்று சொல்ல தாக்ஷ்யும் விரைந்தாள். அரவை இயந்திரத்தில் சிக்கிய அந்த சங்கிலியை கையில் எடுத்து “ஏய் வித்தா லீசு காசு வரும் டா,நமக்கும் இந்த தொழில விட்ட வேற கதி” என்ன இருக்கு இந்த வயசுல நமக்கு யாரு இம்புட்டு பெரிய தொகைய தருவாங்க என்ற ரங்கனின் அறிவுரை மீசையின் காதுகளை தாண்டி தாக்ஷ்யின் காதுகளையும் வந்தடைந்தது. அவள் இருக்கும் திசையை நோக்கி தாக்ஷ்யின் தாய் கண்ணீர் ததும்ப “ஏன்டி நகை கிடைச்சுதா?” அவளின் அதங்க கேள்விக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த சங்கிலியை கையில் ஏந்தி மீசை வாசல் தொடும் முன் தாக்ஷ் சத்தமாய் “இங்க இல்லை அம்மா” என்ற சொல் தாக்ஷ்யின் தாயை நிலைகுலையச் செய்தது. மீசைக்கும் ரங்கனுக்கும் நடப்பது புரியவில்லை. அழுகாட்சியோடு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தாள் தாக்ஷ்யின் தாய் ரங்கனும் மீசையும் சங்கிலியை கையில் ஏந்திக் கொண்டு தாக்ஷ்யை பின் தொடந்தனர். தாட்சாயிணியும் மூக்கூட்டை விட்டு அவள் வீடு அமைந்திருக்கும் டாக்டர் முத்துலட்சுமி தெருவினுள் நுழைந்தாள்.