ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் வடுவூர் அருகே புள்ளவராயன்குடிகாடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹவில்தார் எஸ் திருமூர்த்தி. பிஎஸ்எப் வீரரான இவர், கடந்த 24-ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம் ஹிராநகர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, துப்பாக்கிதவறுதலாக வெடித்துள்ளது. இதனால் அவர் படுகாயம் அடைந்த நிலையில் , சம்பா மாவட்ட ராணுவ மருத்துவமனையில் திருமூர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அறுவை சிகிச்சையின் முலமாக அவர் உடலை துளைத்த குண்டு நீக்கப்பட்டது. அதனையடுத்து ஹவில்தார் திருமூர்த்தி நலமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில், திருமூர்த்தியின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி உயிரிழந்தார். அவரது உடல் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.