நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியதால், அதிபர் ரஃபேல் ட்ரூஜிலோவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட மீராபால் சகோதாரிகளின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா. அமைப்பு முயன்று வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தின் நோக்கம்
இந்த ஆண்டு UNITE (ஒற்றுமை) என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று ஐ.நா. அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து போராட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் பெண்ணுரிமைகளை காப்பதற்கான நோக்கத்துடன் போராடும் பெண்ணிய இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
வரலாறு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை அனுசரிப்பதற்கு ஐ.நா. பொதுச்சபை கடந்த 1979ஆம் ஆண்டில் ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து, 1981ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் உலகெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முக்கியத்துவம்
உலகெங்கிலும் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கின்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் என்றால் அது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. வன்முறை வெளியே சொல்வதற்கு அச்சம், தயக்கம், அவமான உணர்வு போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணற்ற குற்றங்கள் வெளி உலகிற்கு தெரியாமலே இருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது தவிர பெண்களின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி சமத்துவம், வளர்ச்சி மற்றும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.