புதுமுக டைரக்டர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் விஜய் 67 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். அதன் பின்பு பேசிய ஜாங்கிட் திரைப்படங்களில் உயர் அதிகாரிகளின் கதாபாத்திரங்களை தான் படமாக எடுப்பார்கள். ஆனால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை மையமாக வைத்து லத்தி திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
கான்ஸ்டபில்கள் அதிக அளவில் பங்களிப்பை கொடுக்கிறார்கள். அவர்களின் கஷ்டங்களும் அதிகம். அந்த வகையில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை வைத்து படமாக்கிய படக் குழுவினர்களுக்கு காவல் துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ஆக்சன் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என எனக்கு தெரியும். எனவே, வரும் 22ஆம் தேதி வெளியாகும் லத்தி திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார். இவர்களைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், லத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.
இந்தியில் ஒரு வாரம் கழித்து வெளியாகிறது என அறிவித்தார். மேலும் இது விஷாலின் திரைப்படம் அல்ல. இது யுவன் சங்கர் ராஜாவின் திரைப்படம், அதற்கு அடுத்து சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் திரைப்படம். அதற்குப் பிறகு என்னுடைய திரைப்படம் என தெரிவித்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில், நீங்கள் எல்லாம் என்ன கேட்பீர்கள் என தெரியும். ஆனால் அதற்கு நான் பதில் கூறிவிட்டேன்.
லோகேஷ் கனகராஜை பார்த்து சந்தோசமாகவும் இருக்கிறது, அதேசமயம் பொறாமையவும் இருக்கிறது. உங்களை போலவே நடிகர் விஜய் வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என நம்புகிறேன் என கூறினார். விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தினார்.
அதற்கு இல்லை இல்லை, தளபதி என்றால் அவர்தான். நான் புரட்சி தளபதி இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே என கூறினார். அதேபோல படத்தின் இயக்குனர் வினோத்குமார் மற்றும் தயாரிப்பாளர்கள் ரமணா – நந்தா பேசுகையில், லத்தி திரைப்படத்தின் இறுதி 45 நிமிட காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்திருக்கிறார். டிரைலரில் இருப்பதைவிட படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கிறது என தெரிவித்தனர்.