சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் தெரிவித்திருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் குறித்த இந்த அச்சங்கள் தேவையற்றவை என்று பெங்களூரைச் சேர்ந்த டாடா மரபியல் மற்றும் சமூக நிறுவனமான டிஐஜிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ள அவர், அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் பரவிய ஒமைக்ரான் வகை வைரஸ் போன்றதே, சிறிய திரிபுடன் கூடிய ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.