சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முடுக்கி விட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 163- ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று பாதிப்பு 201-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3,397- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.15 ஆகவும் வாராந்திர பாதிப்பு 0.14 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 315- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 879- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.04 கோடியாக அதிகரித்துள்ளது.