திருமதி இந்தியா பட்டம் வென்றவரும் மனநல நிபுணருமான டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எழுதிய கனவுகள் கைக்கெட்டும் தூரம் தான் என்ற நூல் வெளியிடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீட் ஹாலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பலரும் கலந்து கொண்டு எழுத்தாளர் ஹெலன் நளினியை வாழ்த்திப் பேசினர். தன் வாழ்க்கை அனுபவங்களை தன்னம்பிக்கை நூலாக எழுதி எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இந்நூலை அவரது கணவர் ஸ்ரீனிவாசராவ் வெளியிட பிளாரன்ஸின் தந்தை சேவியர், தாயார் ஜெயராணி மகள்கள் ஸ்ரேயா, சரிஹா மற்றும் திரைப் பாடலாசிரியர் அருண்பாரதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் இரண்டாவது மகள் சரிஹா
பேசும் போது தன் தாய்தான் தன் வாழ்வின் ரோல் மாடல் எனக் குறிப்பிட்டு பேசி மகிழ்தார். ஈ.ஆர்.பி நிறுவனங்களின் ஆலோசகராக இருக்கும் நடராஜூம், நூலாசிரியரின் தந்தை சேவியரும் டாக்டர் பிளாரன்ஸ் இந்தளவிற்கு வெற்றிப் பெண்மணியாக திகழ்வதின் காரணத்தை விளக்கி நூலாசிரியரை வாழ்த்திப் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய திரைப் பாடலாசிரியர் அருண்பாரதி, ஜென் கதை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசினார். ஒரு கழுதையை அடித்தால் அது திரும்ப உதைக்கும். ஒரு எருமைமாட்டை அடித்தால் அமைதியாக இருக்கும். ஆனால் ஒரு குதிரையை அடித்தால் அது முன்னோக்கி சீறிப் பாய்ந்து சென்று கொண்டே இருக்கும். அது போல தன் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளை குதிரையைப் போல எதிர்கொண்டு இந்த உயரத்தில் இருக்கிறார் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
விழாவில் ஏற்புரை வழங்கிய டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, தன் வாழ்வின் அனுபவங்களைப் குறிப்பிட்டு பேசி தன் வாழ்வில் சந்தித்த அனைத்து மனிதர்களுமே ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களிடம் பல நல்ல பாடங்களை கற்றுக் கொண்டதாலேயே இந்த உயரத்தை அடைய முடிந்தது எனக் குறிப்பிட்டுப் பேசினார். வரவேற்புரையை திரு ஸ்ரீனிவாசராவ் வழங்க மூத்த செய்தியாளர் டேனியல் ராஜை நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். வண்ணப்படங்களுடன் 144 பக்கங்களில் வெளிவந்துள்ள கனவுகள் கைக்கெட்டும் தூரம் தான் என்ற இந்த நூலை செய்தி அலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.