காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று அவர்களில் 8,888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில், மீதமுள்ள 11,000 -திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டில் 10,000-திற்க்கும் மேற்பட்ட காவலர் காலிப்பணிடங்களை நிரப்ப உள்ளதாக துணை முதல்வர் அறிவித்திருந்தார்கள்.
தற்போது கொரோனாவினால் இக்கட்டான சூழலை தமிழகம் சந்தித்து வரும் நிலையில், கூடுதல் காவலர்களை நியமிப்பது உதவியாக இருக்கும். இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சிபெற்று, நிரப்பப்படாத பணியிடம் இல்லாததால் பணியில் சேர முடியாமல் உள்ளவர்களில் உச்சவயது வரம்பை எட்டியவர்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் எதிர்கால கனவு, வாழ்வாதார நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் நிரப்பப்படாமல் உள்ள காவலர் பணியிடத்தில் பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன்.
மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் தேர்வு எழுதி தோற்காமல் பின்தங்கி இருக்கும் இளைஞர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தேர்ச்சி பெற்ற 10,000க்கும் மேற்பட்டோருக்கும் பணிநியமனம் வழங்க ஆவண செய்ய வேண்டும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.