மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மக்களோடு செல்; மக்களோடு வாழ்; மக்களுக்காக வாழ் என்பதுதான் அண்ணா கலைஞர் போன்றவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின் ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம் வாதாடுவோம் என்றும் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கான திட்டங்களை தீட்டி பயன்பெறும் வகையில் செயல்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசின் சேவைகளை பெற மக்கள் அலையத் தேவையில்லை என்றும் மனுக்கள் பெறப்பட்டு முப்பது நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டார் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருகி உள்ளது என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.